ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வெர்டிகோ (Vertigo)



அடிக்கடி வரும் தொடர் தலைச்சுற்றலே வெர்டிகோ எனப்படும்.

அடிக்கடி மயக்கம், தலைவலி, வேர்வை, தலைசுற்றல், எங்கோ பறப்பது போன்ற உணர்வு, குமட்டல், கண்கள் மங்கலாகவும் (அ) தெளிவில்லாத அசாதாரண கண் அசைவு, பேசும்போது நாக்குழறல், காது மந்தம் மற்றும் எப்போதும் ஒரு இரைச்சல், கை, கால்களில் பலவீனம், உட்கார்ந்தோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ தலைசுற்றல், படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும் போது அறையே சுற்றுவது போல் தலைசுற்றல் போன்றவையே இந்நோயின் அறிகுறிகளாகும். இவர்களுக்கு குறிப்பாக கார், படகு ஓட்டும்போது தலை சுற்றல் வரும்.

இந்நோயின் பாதிப்பு மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். கண்டுக் கொள்ளதா வெர்டிகோ முடிவில் இருதய கோளாறில் நிறுத்தும். மேலும் இது முதுகுத்தணடுவடம் அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என அடுத்தடுத்து ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.

காபி, டீ , புகை, மது அறவே கூடாது. கொழுப்புசத்து நிறைந்த அசைவ உணவுகள், இனிப்பு, உப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நரம்பு கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுவது மிக்க நலம்.

நம் உடலில் தோன்றும் பெரும்பாலான வியாதிகளுக்கு மலசிக்கல் தான் காரணமாக அமைகிறது...இந்த வியாதிக்கும் முக்கிய காரணமே மலசிக்கல் தான்.இதுவே நாளடைவில் காதுகளின் உட்புற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தலைசுற்றல் வந்தவுடன் உடனே அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டால் குறைய ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், இளநீர், மோர் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் நெல்லிக்காய், இஞ்சி, தேன், சீரகம், சுக்கு, கொத்தமல்லி, கறிவேப்பலை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து வெளிவரலாம். இந்நோய்க்கு உணவு மட்டுமே மருந்தாக முடியும்..

ஒரு சிலருக்கு உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நொடிகள் தலை சுற்றி பின் சரியாகும். அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தலைசுற்றல் சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால், ரத்தக் கொதிப்பு அதிகமானாலும், குறைந்தாலும், சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும், தூக்கத்தின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தலைசுற்றல் வரும். தலைசுற்றல் வருவதற்கான மூலக் காரணங்களை கண்டுப்பிடித்து தீர்வு காணலாம்.

அக்குபஞ்சரில் நிரந்தர தீர்வு இந்த நோய்க்கு உண்டு என்று உறுதியுடன் கூறலாம்.

வலிப்பு நோய் (Fits )



இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை வயது வரம்பின்றி எந்த வயதினரையும் தாக்கும். பொதுவாக நோய்கள் குறித்த போதிய தெளிவின்றி நாமே எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், சிகிச்சைகளும், அறிவுரைகளும் நோயின் தன்மை அதிகமாகவதற்கு காரணமாக அமைகிறது. வலிப்பு நோயும் இதற்கு விதி விலக்கு அல்ல. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாத காரணத்தினால் இந்த நோயின் தாக்குதலும் தீவிரமாகவே இருக்கிறது.

வலிப்பு எனப்படுவது மூளைப்பகுதியில் ஏற்படும் இழுப்பு நோயின் தாக்குதல். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் இயக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்கள், சிறிது நேரம் தடங்கல்கள் ஏற்பட்டு உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் வெட்டி வெட்டி இயங்குவதே வலிப்பு எனப்படுகிறது.. இது காக்கா வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் மற்றும் எபிலெப்ஸி என்றும் வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள் , மூளையில் ஏற்படும் கட்டிகள், மூளைக் காய்ச்சல், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகள், மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் , நரம்புமண்டலக் குறைபாடு , போதை பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் மனம் மற்றும் நரம்பு மண்டல சிதைவு, உடலில் சர்க்கரை அளவு (அ) சோடியத்தின் அளவு குறைதல் , உறக்கமின்மை, காச நோய், அஜீரணம், குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாதல் போன்ற காரணங்களினால் வலிப்பு நோய் உண்டாகிறது. வேறு சிலருக்கு எந்த விதமான காரணமும் இல்லாமலும் வரலாம்.

கண் மேலே சொருகிக்கொண்டு மயக்கமடைதல், கை, கால் மற்றும் உடலில் உள்ள பாகங்கள் வெட்டிகொள்வதோடு வாயிலும் நுரை தள்ளுதல், தன்னிலை மறந்து பேசுதல், ஒரே இடத்தை கண்சிமிட்டாமல் பார்த்தல், அதிகபட்சமாக சிறுநீர் கழித்தல் ஆகியவை வலிப்பு நோயின் அறிகுறிகள் ஆகும்.

அதிக அளவு உணவு உட்கொள்வது, வெகுநேரம் தூங்காமல் விழித்திருப்பது, போதை பொருட்கள் மற்றும் மது அருந்துவது போன்றவற்றை வலிப்பு நோயாளிகள் தவிர்ப்பது அவசியம்.இந்நோய் உள்ளவர்களுக்கு கால்சியம், க்ளுக்கோஸ், சோடியம், அமிலம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவை சமனின்றி இருக்கும். எனவே அவர்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் தவிர்த்து விட வேண்டும்.

வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பு அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது மூட நம்பிக்கையே தவிர குணமாக்கும் முறையும் இல்லை.முதலுதவியும் இல்லை. ஒரு தேக்கரண்டி (அ) கடினமான பொருளில் துணியை நன்றாக சுற்றி நோயாளியின் பற்கள் இடையில் வைத்தால் அவர்கள் தன நாக்கை கடித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வலிப்பும் ஒரு நோய் தான் அதனால் இந்த நோய் உள்ளவர்களைக் கண்டு நாம் பயப்படாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே போதுமானது. சரியான சிகிச்சையால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம்.

பூச்சி (Worms)

அதிகமாக பசி இருக்கும். சிலர் நன்கு சாப்பிட்டாலும் கூட எடை குறைவார்கள்.
இதற்கு காரணம் வயிற்றில் இருக்கும் பூச்சிகளே/ புழுக்களே ஆகும்.

இதன் அறிகுறிகளாக சளி மற்றும் வாந்தி, தூக்கத்தில் ஜொள்ளு (Salivation) வடிதல்,சில சமயம் வயிற்று போக்கும் ஏற்படும்.

மேலும் ஏனஸ்சில் (மலவாயில்) அரிப்பு மற்றும் தொப்புளுக்கு கீழ் அடிவயிற்றில் வலியும் இருக்கும்..

ஆண் மலடு ( Infertility in Men )

பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.
பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல , குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவதோடு குழந்தையின்மையும் உண்டாகிறது. குடும்பத்தில் குழப்பமும் கூடுகிறது.
ஆண்களுக்கு மலட்டு தன்மை வர பல காரணங்கள் இருந்தாலும் சில பல காரணங்கள் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகின்றன.



லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் எண்டோகிரைன், வாஸ்குலர் நரம்பு, ஆண்களுக்கு விபத்தில் டெஸ்டிஸ்(விதைப்பை) காயம் (அ) அழுத்தம் ஏற்பட்டால், பொன்னுக்கு வீங்கி காரணமாக உண்டாகும் வைரஸ் தொற்று, மன அழுத்தம், பரம்பரை மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளே ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமாகி அவர்கள் நிம்மதியை தொலைத்து விடும்.

இதை சரிசெய்ய வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி, சூடான நீரில் தினமும் குளிக்காமல் இருத்தல், காபி, புகை மற்றும் மது பழக்கத்தை அடியோடு கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் மிகுந்த பலன் அளிக்கும்.
யோகா, தியானம் போன்ற பழக்கங்களை அனுசரித்து வந்தால் விந்துவின் வீரியமும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

ஆண், பெண் மலட்டு தன்மை என்பது ஒரு குறைபாடு தானே ஒழிய நோயே அல்ல.

வியாழன், 5 செப்டம்பர், 2013

கோகுலம் கதிரில் என்னை பற்றி....


பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடிய எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல் அனைவரும் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் என்னுடைய சிறு பங்களிப்பை பற்றி கோகுலம் கதிர் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு...

என்னுடைய இந்த சிறு சேவையை பாராட்டி கட்டுரை வெளியிட்ட "கோகுலம் கதிர்" பத்திரிகை நிறுவனத்திற்கும் கட்டுரை வெளியாக காரணமாக இருந்த கே.இந்திரா அவர்களுக்கும் , "அறிவோம் அக்குபஞ்சர்" முகநூல் பக்கத்தின் வாயிலாக என்னுடைய சேவையை தொடர்ந்து உற்சாகத்துடன் செய்ய ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமாரந்த நன்றிகள்.

சோரியாசிஸ் (Psoriasis)


மிக எளிதில் குணமடையாத, மனிதனை மிகவும் பயமுறுத்தக் கூடிய நாட்பட்ட தோல் வியாதிகளில் இதுவும் ஒன்று. இந்த வியாதி ஏன், எதனால் வருகிறது என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் நிறைய காரணங்கள் தொடர்புடையதாய் இருக்கிறன.

உணவு ஒவ்வாமை, வளர்சிதை மாற்றங்கள், சுவாசகோளாறுகள் கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் ஏற்படும் தொந்திரவுகள் ஆகியவற்றின் மூலம் இது வரலாம்.. மன அழுத்தம், அதிகமாக மது குடிப்பது. புகைபிடித்தல், முக்கியமாக கடல் உணவு வகைகள் (தயிருடன் மீன் சேர்த்து உண்பது), சில மருந்துவகைகளின் ஒவ்வாமை போன்ற காரணங்கள் சோரியாசிஸ் நோயை அதிகப்படுத்துகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இது தாக்க வாய்ப்பு உண்டு.

சோரியாசிஸ் யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இது தொற்றோ, வைரஸ், பாக்டீரியாவால் உருவாகும் நோயோ இல்லை. உயிருக்கு உடனே ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கடுமையான நோயும் இல்லை என்றாலும் உடல் அழகை பாதிப்பதால் தன்னம்பிக்கையை குறைத்து, மனச்சோர்வை உண்டு பண்ணும் என்பதில் ஐயம் இல்லை...
சாதாரணமாக மனிதனின் உடலில் தோலிலுள்ள செல்கள் சீராக வளர்ந்து நான்கு வாரங்களில் உதிர்ந்து விடும். ஆனால் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் வெகு விரைவாக ஒரு சில நாட்களிலோ (அ) ஒரு வாரத்திலோ வளர்ந்து உதிர்ந்து விடும். அதிகப்படியான செல்களின் வளர்ச்சியே இதற்கு காரணம்..அளவுக்கு அதிகமாக உருவாகும் இந்த செல்களினால் தோல் தடிமனாகவும், சிவந்தோ (அ) வெள்ளை நிறத்திலோவும் காணப்படும். தோலின் மீதிருந்து வெண்மையான பளபளப்பான செதில்கள் மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும்.


சிவந்த இந்த வகையான திட்டுகள் முதலில் சிறிய மற்றும் பெரிய அளவில் தோன்றும். இந்த வியாதி பெரும்பாலும் தலையில் பொடுகு போல தோன்றி அதுவே அரிப்பு, முடிகொட்டுதல் என ஆரம்பித்து பரவும்..ஆனால் இது சோரியாசிஸ் நோயின் பாதிப்பு என்று அறியாமல் பொடுகுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்போம். மாதகணக்கில் சரியாகாமல் உடலின் மற்ற பாகங்களில் பரவ ஆரம்பித்த பின் தான் வந்து இருக்கும் நோயின் தன்மை புரிய வரும். மேலும் முழங்கைகள், முழங்கால்கள் , கணுக்கால், கைகள், பாதம் மற்றும் இடுப்பின் கீழ்பகுதி , காதுக்கு பின்புறம், அக்குள், தொடையிடுக்கு, கை, கால் மடிப்புகள் ஆகிய இடங்களிலும் தோன்றும் சோரியாசிஸ் பெரிய வட்டங்களாக ,சிவப்பு நிறத்துடன் செதில்கள் போன்று இருக்கும். இந்த நோய் தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும்.

சொரிந்தால் இரத்த கசிவுடன் செதில் போல உதிர்தல், கைவிரல், கால்விரல் நகங்களில் சொத்தை, மூட்டுகளில் வலி என உடல் முழுவதிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துவதொடு மட்டுமில்லாமல் வெளித்தோற்றத்தையும் இது பாதிப்பதால் மற்றவர்களின் வித்தியாசமான, அருவருக்கத்தக்க பார்வைக்கு உள்ளாவதால் தீவிர மனஉளைச்சளையும் ஏற்படுத்தும். மேலும் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தண்டுவடம் மற்றும் மூட்டுகளையும் பாதித்து ஆர்த்ரைடீஸ் (arthritis) கண்டிப்பாக வரும்.

இது மனைவி (அ) கணவன் யாருக்கு இருந்தாலும் மற்றவர்களுக்குப் பரவாது. இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலோ, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நாம் உபயோகிப்பதாலோ இந்த நோய் பரவாது.. ஆனால் இந்த நோய் காரணிகள் மரபணுக்களின் வழியாக கடத்தப்படுவதால் இந்த நோயின் தாக்குதலுக்குள்ளானவர்களின் வாரிசுகளுக்கு இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்...சமயங்களில் மூன்றாவது, நான்காவது தலைமுறையில் கூட இதன் பாதிப்பு வெளிப்படும். மரபு வழி காரணம் சொல்ல பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமே...

இந்த வியாதி எந்த நாட்டு மக்களையும் விட்டு வைத்ததில்லை...இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது . உலகின் மொத்த மக்கள் தொகையில் 2% பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும்... இந்தியாவில் 16 மில்லியன் பேரும் , அமெரிக்காவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகையில் 3% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன...

சோரியாசிஸ் தோல் வியாதிக்கு வெளிநாடுகளில் டாக்டர் பிஷ் அல்லது கர்ரா ரிஃபா (GURRA RUFA) என்ற மீன்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது... இந்த மீன் நிப்பிள் மீன்கள் என்றும் கங்கள் மீன்கள் என்றும் வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது... இது மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் நதிகளில் இருக்கும் மீன்களை கண்ணாடி தொட்டியில் வளர்த்து சோரியாசிஸ் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை ஒரு தற்காலிக தீர்வை தருமே தவிர நிரந்தர தீர்வு ஆகாது... மரபணுக்களில் இருக்கும் இந்த நோய் காரணிகளை முற்றிலும் நீக்க முடியாது என்று கருத்து பரவலாக இருந்தாலும் இந்நோய் குறித்து கவலை, பயம் கொள்ளாமல் மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்ளுதல், யோகா, தியானம் மூலமாகவும் உடலின் தேவை அறிந்து உண்ணுதல் உறங்குதல் என் வாழ்ந்தால் இந்த வியாதியை பூரணமாக கட்டுப்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளலாம்.

மேலும் இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் சகஜமாக பழகுவதன் மூலம் அவர்களுக்கு மனோ ரீதியாக பக்கபலமாகவும், ஆறுதலாகவும் இருக்கலாம

உயர் இரத்த அழுத்தம்



உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களே இன்றைய சூழ்நிலையில் இல்லை எனும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனலாம்...

கவலையும், கோபமும் தான் மனிதனை கொல்லும் முதல் எதிரிகள்...எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல் ஆத்திரம் தான் அனைவரின் வாழ்விலும் இப்போது நிரம்பி வழிகிறது...அமைதி என்பது கடுகளவு கூட இருப்பது இல்லை..

கோபம், அதீத வேலை பளு,எரிச்சல், ஆத்திரம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் வர காரணங்கள் என்றாலும் மிக முக்கியமான காரணம் மலச்சிக்கல் தான்.. எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதன் மூலம் இதயம் அதிக அளவில் வேலை செய்ய நாமே காரணமாகிறோம்..


நம் உடலுக்கு தகுந்த உணவு என்று உணர்ந்து உண்டு வந்தால் இதயத்திற்கும் ஓய்வு கொடுக்கலாம்.... மேலும், மனச்சுமை, மற்றும் வேலையை சிறிது குறைத்துக் கொண்டால் சரியாகிவிடும்...

“தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”
இது உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும், அதிகமாக கோபப்பட்டு உயர் இரத்த அழுத்தம் வர வரவழைத்துக் கொள்ளப் போகிறவர்களுக்கும் அன்றே திருவள்ளுவர் சொல்லி வைத்து இருக்கிறார்....

ஆரம்ப காலங்களில் தோன்றும் சிறு சிறு வியாதிகளான தலைவலி, மயக்கம், மங்கிய கண்பார்வை, குமட்டல், வாந்தி, தைராய்டு, சிறுநீரகப்பை கோளாறுகள், சர்க்கரை, தொப்பை (Obesity), சுவாசகோளாறுகள், நெஞ்சு வலி எனும் இந்த வியாதிகளே சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தம் வரவும், கூடவும் காரணமாகிறது...

ஆரம்ப நிலையிலே இதற்கான மூல காரணம் என்ன எந்த உறுப்பு பாதித்து இருக்கிறது என்று ஆராய்ந்து சரி செய்யாவிட்டால் இப்படிப்பட்ட நாட்பட்ட... உயர் இரத்த அழுத்தமே…..கீழ்க்கண்ட மிகப்பெரிய வியாதிகளை உருவாக்கி ஒரு மனிதனை தன்னிலை இழக்கச் செய்து வாழ்வை முடக்கச் செய்யும் காரணிகள்

.... நெஞ்சுவலி, இதயம் செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, படிப்படியாக கண்பார்வை இழத்தல், நடக்கவே முடியாத அளவிற்கு கால்களில் நிரந்தர வலி....இப்படி அடுக்கி கொண்டே போகலாம்......நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் இதயத்தையும், இரத்த குழாய்களையும் அதிக அளவில் பாதித்து அதன் செயல்பாட்டை முற்றிலும் நசுக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு தீர்வும் உண்டு..அதிகபடியான உடல் எடை இருந்தால் நாமே வீட்டிலேயே சரி பண்ணிகொள்ளலாம்......
உணவை கொஞ்சம்..கொஞ்சமாக குறைத்து, அதிகபடியான கலோரிகளை எரிக்க 3௦ நிமிடங்கள் நடைபயிற்சி செய்தும் குறைக்கலாம்...
இதனால் அதிகபடியான கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகிறது....
நம் உடல் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிரணுக்களை களைந்தும், உற்பத்தியும் செய்து கொண்டே இருக்கிறது... மேலும் தீர்வு என்று பார்த்தால் திரும்பவும் புகைத்தல், குடி இரண்டையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள், உடல் எடை கூடாமல் சீராக வைத்துக் கொள்ளுவது, எதற்கு எடுத்தாலும் வரும் கோபம், மனஉளைச்சல் தவிர்த்து ...அமைதியான சூழ்நிலையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொண்டால் எந்த வியாதியுமே நம்மிடம் அண்டாது....

ஆட்டிசம் – வரலாறு


நிறைய பெற்றோரை நிம்மதி இழக்க செய்யும் ஒரு விஷயம்.. தற்போதைய காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகளில் 116 குழந்தைக்கு ஒரு குழந்தைக்கு இந்த குறை பாடு இருப்பதாகவும்.. அமெரிக்காவில் இது 166 குழந்தைக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.
ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது, பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார். முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.
ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகை குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.

சரியாக இதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
கானரின் ஆராய்ச்சியில் முதல் முதலாக ஆட்டிச பாதிப்புக்குள்ளானவராக கண்டறியப்பட்ட டோனால்ட் (Donald Triplett ) என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010ல் கண்டறியப்பட்டபோது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.
ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.
நன்றி ....யெஸ். பாலபாரதி

ஸ்டெம் செல் (STEM CELLS)

விஞ்ஞானி எர்நெஸ்ட் என்பவர் 1877இல் எழுதிய ஆந்த்ரோபோஜெனி (Anthropogenic) என்ற நூலில் முதன் முதலில் கரு முட்டைகளை (Fertilized egg) ஸ்டெம் செல் எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பிறந்த ஆரிப் பாங்சோ (Ariff Bongso) எனும் கரு ஆராய்ச்சியாளர்தான் உலகில் முதன் முதலில் 1994இல் மனிதனின் கருவிலிருந்து ஸ்டெம் செல்லைத் தனியாக பிரித்தவர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம்செல் பற்றி புத்தகமாக முதலில் வெளியிட்டாலும் ஆரிப் பாங்சோ அவர்களின் முயற்சிதான் ஸ்டெம் செல்லின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது.
உயிர் என்பது உயிரணுக்களின் (செல்) இயக்கமே ஆகும். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு.. ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது தாயுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக் கொடி (umbilical cord blood)-யில் உள்ள இரத்தத்தில் அதிகமாக இருக்கும். மனிதனின் எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலும், இரத்தத்திலும், முதுகெலும்பு தண்டு வடத்திலும், நரம்பு மண்டலத்திலும், குடலிலும், தோலிலும் உள்ள திசுக்களிலும், அடிவயிற்றிலுள்ள கொழுப்பு திசுக்கள் சுற்றியும் ஸ்டெம் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பதோடு மட்டுமில்லாமல், தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசுவிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.. பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு காரணமான மரபணுவை நேரடியாக சரி செய்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதை தான் ஸ்டெம் செல் சிகிச்சை என்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கரு முட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் பிரதிகளை உருவாக்க முடியும். பின்பு பாதிக்கப்பட்ட செல்களை நீக்கிவிட்டு இந்த புதிய செல்களை அங்கு பொருத்தினால் அவர்களை குணமாக்க முடியும். ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், தனிப்படுத்திக் கொள்ளவும் இயலும் என நிரூபித்தும் காட்டப்பட்டுள்ளது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு புதிய செல்களை உருவாகுவதைத் தான் ஸ்டெம் செல் சிகிச்சை விவரிக்கிறது. செல் சிகிச்சை பெரும்பாலும் செல்களில் இருக்கும் மரபணு திசுக்களை புதுப்பித்து நோய்களை இனம் கண்டறிந்து நீக்குகிறது. நோய் அல்லது காயம் ஏற்படும் நேரங்களில் சிகிச்சை செய்யும் போது பழுதடைந்தை செல்களை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் புதிய திசுக்களை உருவாக்குவதிலும் ஸ்டெம் செல் இன்றியமையாததாக திகழ்கிறது.
குணப்படுத்தவே முடியாது என்று கூறப்பட்ட வியாதிகளான சிறுநீரக செயலிழப்பு, இரத்தப் புற்று நோய் , நீரழிவு நோய் மற்றும் இருதயக் கோளாறு, எய்ட்ஸ், பார்கின்சன்ஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், அல்சமீர், தண்டுவட பாதிப்புகள், நரம்பு மண்டல பாதிப்புகள், பார்வை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை மேலான ஒன்றாகும். இந்த சிகிச்சை முறை நம் உடலின் அழகை மேலும் கூட்டும் அழகுக்கலையையும் விட்டு வைக்க வில்லை..

மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவிலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன