சிறுநீரகங்கள் (கிட்னி) பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நகரத்தில் வேலை செய்யும் துப்புரவுப்பணியாளர்கள் ஓரிருநாள் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி நகரம் நரகமாகி விடுமோ.. அது போல. உடலில் சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்தால் உடலே நரகமாகி விடும்..
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எலும்புக் கூண்டுக்குள் அவரை விதை வடிவில் சிறிதாக இருப்பவை. நம் உடலில் உள்ள உலகின் மிகச்சிறந்த, மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை, கழிவுமண்டலத்தின் முக்கிய காரியதரிசி என்றே
சிறுநீரகங்களை கூறலாம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. கிட்டதட்ட 11லிருந்து14செ.மீ நீளமும், 6செ.மீ அகலமும் மற்றும் 4செ.மீ தடிமனும் கொண்டது.
இரத்தத்தைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் கழிவாக வெளியேற்றுகிறது. உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில் 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை..ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது.
உடலுக்கு தேவையான நீர்சத்து சம நிலையில் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. நாம் உண்ணும் உணவு ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும் ரத்தத்தில் கலந்து சீறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. இவ்வாறு அத்தனை பணிகளையும், மேலும் பல பணிகளையும் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன.
சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு, கழிவுகளை வெளியேற்றாமல் உடலில் தங்கி விடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ஓயாமல் இறுதி மூச்சுவரை உழைக்க தயாராக இருக்கும் சிறுநீரகங்கள் இடையில் திடீரென வேலை நிறுத்தம் செய்யவும், பழுதடையவும் காரணங்கள் என்ன?? சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்ததை எப்படி ஆய்வது.. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன..? சற்று விரிவாக பார்க்கலாம்..
முதலில் சிறுநீரகங்கள் பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடை இழப்பு, குமட்டல், பசியின்மை, வாந்தி, சுறுசுறுப்பின்மை, அதிக தாகம், அடிக்கடி விக்கல், சிறுவயதில் பற்கள் விழுதல், கர்ப்பப்பை கோளாறுகள், எப்போதும் சோர்வு, உடல்நலக் குறைவு, தலைவலி, தூக்கத்துடன் கூடிய மந்தமான நிலை, குழப்பம், மனப்பிரமை, நினைவற்ற நிலை, தோல் நிறம் வெளுத்துப் போதல், தசை துடிப்பு அல்லது தசை பிடிப்பு, உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி, சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல், வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம், கைகள் பாதங்கள் மற்றும் உடலில் சில பகுதிகள் மரத்துப் போதல், முறையற்ற நகங்களின் வளர்ச்சி, சுவாசிப்பதில் நாற்றம் மற்றும் சிரமம், கணுக்கால், பாதத்தில் வீக்கம், சிறுநீரகம் உள்ள இடத்துக்கு மேல் விலாபுறத்தில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்துள்ளன என்று நாமே உணரலாம்.
உடலின் மற்ற உள்ளுறுப்புகள் முறையாக செயலாற்ற முக்கிய காரணியாக திகழ்வது இந்த சிறுநீரகங்கள் தான். ஒரு மனிதனின் உயிர்சக்தி இருக்கும் இடமான மூலாதார சக்தி என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் பாதித்தால் அதன் விளைவு என்னவென்று பார்த்தோம்.
எனவே சிறுநீரக ஓடுபாதைகளை ஆரோக்கியமாகப் பராமரித்தாலே எந்த விதமான சிக்கலும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்நிலையில் இத்தனை சிறப்புமிக்க சிறுநீரகத்தினை சிறப்பாகப் பாதுகாத்து வருவதே ஆரோக்கியத்தின் அடிப்படை என அக்குபஞ்சர் மருத்துவம் வலியுறுத்துகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நமது கடந்த பதிவில் சிறுநீரகங்களை பற்றியும் அதன் வேலைகள் மற்றும் , பாதிப்புகள் பற்றியும் பாதிப்படைந்திருப்பதற்கான அறிகுறிகள் பற்றியும் விரிவாக பார்த்தோம்..
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹார்மோனையும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது. செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி இரத்தத்தில் கலந்து விடும். இவற்றைப் பிரித்தெடுத்து வெளியேற்றுவதுதான், சிறுநீரக மண்டலத்தின் முக்கியப் பணி.
நமது உடம்பில் சேரும் அசுத்த இரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி, உடம்பை நல்ல நிலையில் வைப்பது தான் நெப்ரான்களின் பணியே. பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு-பிறப்புறுப்பின்
உலகின் மிக சிறந்த, நுண்ணிய சுத்திகரிப்பு தொழிச்சாலையான சிறுநீரகங்கள் பாதிக்கப்பட என்ன காரணம்..?
இன்னதுதான் என்று ஒரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது.. இந்த செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும்... திடீரெனவும் ஏற்படும்..
முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பதற்கான காரணங்களை பார்ப்போம்..நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளூர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது , சிகரெட் ஆகியவை மிக முக்கிய காரணங்கள்... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம்.. சர்க்கரை வியாதிகள்... இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது...
.நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரினை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டு வலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்ட முறையற்ற மருந்துகளினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும். கருத்தடை மாத்திரைகளை தொடரச்சியாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டாலும், மாற்று மருத்துவர் துணையின்றி, மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தைப் பாதிக்கும். இணைப்பு திசுக்கள் நோய்களினாலும், எய்ட்ஸ் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும். இது மட்டுமில்லாமல் .பல்வேறு மருந்துகளின் பாதிப்பினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து விடும். தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்தம் ஓட்டம் இல்லாததால் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பைக்கு முதல் எதிரி.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும். நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து பின் கற்களாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது. பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரக நோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக காரணமாகிறது.
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு என்று என்றாலும் அதை நம் அக்குபஞ்சர், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்.
மேற்கண்டவை எல்லாம் சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்.. இவற்றை நமது விழிப்புணர்ச்சியின் மூலமும், யோகா, தியானம் போன்றவற்றின் மூலமும், முறையாக பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலமும் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும்...
ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதிகபடியான இரத்த இழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, சிறுநீரகங்கள் உடனடியாக செயலிழக்கும்...
சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு. சில வலிகளுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் அதனால் பக்கவிளைவுகள் கண்டிப்பாக உண்டு என்று அத்துறை சார்ந்த மருத்துவர்களே ஏற்றுகொள்கின்றனர். இப்படி இருக்க இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்படும் (அ) மற்ற உறுப்புகள் பாதிக்கப் பட்டு கடைசியில் சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீரக பாதிப்புக்கான காரணங்களையும் தெரிந்துகொண்டோம்... சரி.. இவ்வளவு காலமும் அதை பற்றி விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்து விட்டோம்... ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது... அல்லது.. பாதிப்பு வராமல் தடுக்க என்ன செய்வது...
சிறுநீரகங்கள் (கிட்னி), சிறுநீர்ப்பை பாதித்தால், செயலிழந்தால் குணமாக
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * **********************************
நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே சிறுநீரகங்கள் (கிட்னி) மற்றும் சிறுநீர்ப்பை பற்றிய இந்த மூன்று பதிவுகளுமே.
இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் உள்ளதாககவும்,
ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதிகள் வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. முற்றிய நிலையில் தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் மனநிலையை உடைத்து, பயத்திலே அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். அதனால் தான் இதை உயிர்கொல்லி வியாதி என்று கூறுகிறார்கள். இப்படி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்ச்சி இல்லாமலும், அலட்சியத்தின் காரணமாகவும் ஆரம்பகாலங்களில் விட்டுவிட்டு நோய் மிகவும் முற்றிய நிலையில் அந்த வியாதியின் தீவிரம் உணருவது வேதனையே.
கழிவறை வசதி இல்லாதது.. பயணம் செய்யும்போது.. வேலைப்பளு போன்ற காரணங்களால் சிறுநீரை அடக்குவது பெரும் ஆபத்தில் முடியும்... சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் சுவாரஸ்யம் சிறுநீர் கழிப்பதை கூட வெகுநேரம் தள்ளிப்போட வைக்கிறது... அடக்கி வைக்கப்டும் சிறுநீரால் சிறுநீரகங்கள் வேலை அதிகரித்து, அதன் ஆயுள் குறையும். (சிறுநீரை அடக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு.)
அடிக்கடி வலி நிவாரணி (painkiller) மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது.
வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த நீர் கொழுப்புகளை இறுக்குவதால் ஜீரணிக்க முடியாமல் உடலின் இயக்கத்தை (metabolism) பாதிக்கும். சாப்பிடும்போது கோக், பெப்சி எடுத்துக் கொண்டால் சிறுநீரகக்கோளாறு அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.
சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் புகைப்பிடிக்கும் பழக்கம். எனவே சிறுநீரகத்தை பாதுக்காக்கவேண்டும் என்றால் முதலில் புகை பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்நமது உணவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் மாற்றியமைத்துக்கொண்டால் சிறுநீரக கோளாறுகள் வராமல் தடுக்கலாம்...
ரசாயனம் மிகுந்த செயற்கை உப்பு மிகுந்த துரித உணவு உணவுகள், சிப்ஸ்கள், மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் மிகுதியாக உள்ள உப்புக்கள் சிறுநீரகத்தில் சிறுக சிறுக சேர்ந்து சிறுநீரகம் செயலிழிந்துவிடும். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் அறவே சாக்லேட், காஃபி, டீ, மற்றும் கீரைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால் சிறுநீர் வெளியேற்றத்தை தூண்டும், அதே நேரம் யூரிக் ஆசிட் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமான உணவும், உடலும் தேவை. சரியான உணவு, தூக்கம், மலசிக்கலின்மை போன்றவை மிகவும் முக்கியம்.
மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் பல நோய்களை ஏற்படுத்த காரணங்களாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளதால், சைவ உணவே ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சிறந்தது.
மீன்கள் , உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
முட்டைகோஸ், காலிப்ளவர், பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, பரங்கிக்காய்,கேரட் , முள்ளங்கி, ஆப்பிள், சீமை களாக்காய், தர்பூசணி, அன்னாசிபழம், வெள்ளரிக்காய், எலுமிச்சை, மாதுளை, பிஸ்தா, பாதாம், இளநீர் ஆகியவையும் சிறுநீரகத்திற்கு நல்லது. எனவே எப்பொழுதும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலும், உடல் உறுப்புக்களும் ஆரோக்கியமாக திகழும்.
முறையான உணவுப் பழக்கம், எளிய உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்ற சில கட்டுப்பாடுகளை வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.
அக்குபஞ்சர் முறையில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முற்றிலுமாக வெளிவரலாம். மேலும் கை விரல்கள், கால்களில் பாதம், விரல்கள் மரத்துப் போதல், வளர்சிதை மாற்றங்களை முறைப்படுத்துதல், பழுதுப்பட்ட உறுப்புகளையும், தசைகளையும் சீர்படுத்துதல், போன்றவை மிக எளிமையாக மருந்துகளின்றி குணப்படுத்தலாம்.
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உடலில் உண்டான தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், குழப்பமான மனநிலை, சுவாசம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் அனைத்துமே அக்குபஞ்சர் முறையில் உடலில் மிகச்சரியான, தொடர்புடைய புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண முடியும்.
நாட்பட்ட கிட்னி பிரச்சனைகள் அக்குபஞ்சரில் குணப்படுத்த மிக நீண்ட காலம் ஆகலாம். ஆனால் அவர்கள் உடல் உபாதையிலிருந்து வெகுவாக வெளிவர உதவும். கிட்னியில் பழுது உண்டான சில மாதங்களிலே அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடினால் அவர்கள் பூரண குணமடையலாம்.
படத்தில் காட்டி இருக்கும் புள்ளிகளில் ஒரு மணி நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை 3 லிருந்து 10வினாடிகள் வரை அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை நன்கு ஆழ்ந்து உள்ளிருத்தி, மெதுவாக வெளி விட வேண்டும். இப்படியே தொடர்ந்து வீட்டில் செய்துக் கொண்டு வருவதால் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் போன்ற வியாதிகளில் இருந்து மீண்டு வர உதவும். இங்கு குறிப்பிட்ட முறையில் அழுத்தம் கொடுக்கும் போது, அவர்களே தன் உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர முடியும்.
இது ஒரு ஆரம்பகால தற்காலிக சிகிச்சை மட்டுமே.. சிறுநீரக கோளாறுகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற தகுந்த அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி முறையான மருத்துவம் மற்றும் உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தாலே இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதோடு, மற்ற உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக