வியாழன், 28 ஆகஸ்ட், 2014

அழகுடன் ஆரோக்கியம் - கருஞ்சீரகம்



இயற்கை கொடுத்த மூலிகை மருந்துகளில் கருஞ்சீரகம் மிக முக்கியமானது.உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது நூற்றுக்கும் மேலான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இன்னும் கூட இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இன்னும் பலப் பல வியாதிகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் துணையுடன், மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.




எகிப்து மக்களின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அருமருந்து கருஞ்சீரகம். எகிப்தில் பிரமிடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட அரச குடும்ப "மம்மி" களுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு இணையாக நிறைய மருந்துப்பொருட்களையும் சேர்த்தே பாதுகாத்திருக்கிறார்கள்... அப்படி பாதுகாக்கப்பட்டவைகளில் மிக முக்கியமான இடத்தை இந்த கருஞ்சீரகம் பிடித்திருக்கிறது..கருஞ்சீரகத்தினை பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அங்குள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்..இதன் பயன்பாடுகள் பற்றிய நீண்ட வரலாறு எகிப்தில் உண்டு. இதன் காரணமாகவே அனைவரது வீட்டு சமையலறையிலும் கருஞ்சீரகத்துக்கு ஒரு முக்கிய இடத்தை அம்மக்கள் இன்றளவும் கொடுத்து வருகிறார்கள்..

டூடுட் அங்க் அமான் என்கிற பாரோ எகிப்து மன்னன் தன்னுடைய மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கும் அவசியம் என்று தன்னுடைய கல்லறையில் இந்த கருஞ்சீரகத்தை வைக்க சொன்னதற்கான குறிப்புகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.... எகிப்தில் கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த ஃபாரோஸ் மற்றும் மருத்துவர்கள் நாட்டில் நடக்கும் பெரிய விருந்துகளுக்கு பிறகு வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதனை சமன்படுத்தவும் இதே கருஞ்சீரகத்தை உபயோகித்துள்ளனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் தலைவலி, பல்வலி, சளி மற்றும் தொற்றுநோய்களுக்கும் இதையே மருந்தாக கையாண்டுள்ளனர்.

18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அழகியாக திகழ்ந்த அரசி ஃநெபிர்டிடி தன் அழகைப் பாதுகாக்கவும், பாரமரிக்கவும் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்ததாகவும், மேலும் தன்னுடைய நகங்கள் மற்றும் முடியையும் இந்த எண்ணையைக் கொண்டே தன் வாழ்நாள் முழுவதும் பராமரித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.


சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது கேன்சர் அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் கேன்சரானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் ரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும்.. ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்த பின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. (சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த கான்சர் வரும் வாய்ப்பு உண்டு) . அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் கேன்சர் செல்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது..

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2, வைட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பரு அறவே போக்கும். கரப்பான், சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலிகளைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. கீல் வாதம், தலைவலி, நாய்க்கடி, கண்வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

சிறப்பு குறிப்பு: கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் சளி தொல்லையிலிருந்து உடனடி நிவராணம் பெறலாம்.

பல வியாதிகளுக்கு கருஞ்சீரகம் ஒன்றே அருமருந்து. அருமருந்தான கருஞ்சீரகத்தை நாமும் நம்முடைய சமையலறையில் அமர்த்தி நோய்களின் வரவை தடுக்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக