வியாழன், 28 ஆகஸ்ட், 2014

மனமும், உடலும்



மனித உடல் என்பது அளப்பரிய ஆற்றலையும் சக்தியையும் உள்ளடக்கியது. இந்த சக்தியானது மனதோடும் சம்பந்தப்பட்டே... பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

மனதில் எழும் எண்ணங்கள் சக்தி அலைகளாக உருமாறி உடலை புத்துணர்ச்சியாகவோ/தளர்ந்து போகவோ செய்யும்... அதாவது... நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் , இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அழகாக இருக்கிறோம், நமக்கு நிறைய அறிவு இருக்கிறது போன்ற எண்ணங்கள் தொடர்ந்து உருவாக உருவாக மனதோடு இணைந்த இந்த உடல் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. அதேபோல எதிர்மறை எண்ணங்களான "என்னவோ தெரியல.. ரொம்ப டயர்டா இருக்கு.. உடம்பு சரி இல்லாதது போல இருக்கு.... இன்னிக்கு என் முகமே நல்லா இல்ல.." இப்படியான எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக அதிகமாக மனமது சோர்ந்து போக உடலும் அப்படியே பிரதிபலிக்கிறது...

இந்த சக்தியானது உடலுக்குள் மட்டுமல்லாமல் உடலுக்கு வெளியேயும் பிரயோகிக்கப்படுகிறது.. ஒவ்வொரு மனிதரும் இப்படியாக வெளியிடும் சக்தி அலைகள் ஒன்றோடொன்று இணைகின்றன...

அனைத்து மதங்களிலும் பிரார்த்தனை செய்ய கோயில்,மசூதி, தேவாலயம், குருத்வாரா, விஹார் என பற்பல இடங்களை ஏற்படுத்தி அவ்விடங்களில் மக்கள் கூடி பிரார்த்தனை செய்ய வைத்தது இந்த அடிப்படியில் தான்.... இப்படியான வழிபாட்டுத்தலங்களில் கூடும் மக்களில் சுமார் 90% பேர் நல்லவிஷயங்களை மட்டுமே நினைப்பார்கள் அல்லது வேண்டிக் கொள்வார்கள்.. அப்போது அவர்களின் உடலில் இருந்து என்ன அலைகளின் சக்தியானது வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும்.பிரார்த்தனைகள் எங்கு அதிகம் இருக்கிறதோ அங்கு அமைதியும், ஆனந்தமும் மட்டுமே இருக்கும்.

"நன்றும் தீதும் பிறர் தர வாரா" நம்முடைய நல்ல எண்ணங்கள் தான் நம்மையும், நம்மோடு இருப்பவரையும் வழி நடத்தும் மிக முக்கிய பிரபஞ்ச காரணிகள். மனதோடும், எண்ணங்களோடும் தொடர்பில் உள்ள இந்த உடலை, நல்லெண்ணங்கள் மற்றும் நற் செய்கைகளால் ஆக்கபூர்வமான வழியில் செயல்படுத்தினால் மனமும் உடலும் வலுப்படும், வாழ்வும் சிறப்புறும்.

மனமது செம்மையானால் செயலும் செம்மையாகும். இந்த உடல் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது மனதை தளர்த்தி, ஓய்வு மட்டும் கொடுங்கள் என்பது மட்டும் தான். மற்ற அனைத்து செயல்களையும் நம் விருப்பு, வெறுப்பு எதையும் எதிர்பார்க்காமல் முறையாக இயங்கி கொண்டே இருக்கும் ஆற்றல் பெற்றது நம் உடல்.

முறையற்ற எண்ணங்களை, செயல்களைத் தவிர்த்து...தினமும் சில மணி நேரங்கள் மனதிற்கு அமைதியும், ஓய்வு கொடுக்க முயற்சி செய்யுங்கள். மனதால் முடியாதது எதுவுமே இல்லை. பஞ்சபூதங்களின் இயக்கத்தால் இந்த உடல் பிரபஞ்ச சக்தியின் துணையுடன், நம்முள் இருக்கும் ஆற்றலுக்கு வலுக்கொடுத்து.....எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக