திங்கள், 27 ஜூலை, 2015

தாய்ப்பாலில் விஷம்



ஒரு பெண் குழந்தை வளர வளர பதின்பருவ தொடக்க காலத்தில் 
பெண்களுக்கான பாலியல் உறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இன்னொரு உயிரை தாங்கும் கருப்பை முதல், அந்த உயிருக்கு உணவு உற்பத்தி செய்யும் பால் சுரப்பிகள் வரை அந்த காலகட்டத்தில்தான் வளர ஆரம்பிக்கிறது.

இவைகள் வளர வளர பெண்ணுக்குள் கனிவு, கருணை, கர்வம், பயம் எல்லாம் கூடவே சேர்ந்து வளர்கிறது.கருப்பையில் வளர ஆரம்பிக்கும் உயிர் கருப்பையை விட்டு வெளியேறி வெளி உலகத்தின் காற்றை சுவாசிக்க தயாராகும் நேரத்தில், உயிரின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பால் சுரப்பிகள் தங்கள் வேலையை தொடங்குகிறது.

இதுநாள் வரையில் கருப்பையில் வளர்ந்த உயிரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த உடல், வெளிஉலக வாழ்க்கை முறைக்கு அந்த குழந்தையை பழக்கும் வரை, வெளியில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தமக்கு தேவையான சக்தியை சுயமாய் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெறும் வரை, தாய்ப்பால் தான் அக்குழந்தைக்கு ஆதராம்.

இந்த பால் சுரப்பிகள் ஒரு உணவுத் தொழிற்சாலை. இதில் புரதம், கார்போ-ஹைட்ரேட், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்பிற்கான என்சைம்கள் ஆகியவை தேவையான அளவில் கலந்தே இருக்கும். இந்த சரிவிகித உணவானது பிறந்த உயிருக்கு தேவையான சக்தியை கொடுப்பதுடன் வெளிப்புற வாழ்க்கை முறையில் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கும் மருத்துவ சக்தியையும் கொடுக்கிறது.
சரி.

இதெல்லாம் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட தகவல்கள் தான். இப்போது ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் செய்தி. இதுநாள் வரையில் கலப்படமில்லாத உணவு என்று நாம் எதை நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த தாய்ப்பாலில் விஷம் இருக்கிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.
அதெப்படி தாயின் உடலில் உற்பத்தியாகி நேரடியாக குழந்தையின் வாயில் புகட்டப்படும் தாய்பாலில் எப்படி விஷம் கலக்கும்? கலந்தது வேறு யாருமல்ல. நாமே தான், ஆம்....புதிய பசுமை புரட்சி கொடுத்த தீமைகளில் இதுவும் ஒன்று.

இது பற்றி கொஞ்சம் வேறொரு தளத்திற்கு பயணித்து உண்மை அறிவோம்.
பயிரிடும் விவசாயிகள் தங்களது பயிர்களை காக்க இரசாயண பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டது. முன்பெல்லாம் சாதாரணபூச்சிக் கொல்லிகளை பயன் படுத்தினார்கள். அந்த சாதாரண பூச்சிக்கொல்லிகளுக்கு பழகிய, வீரியம் பெற்ற பூச்சிகளை அழிக்கவும், மீண்டும் மீண்டும் தாக்கும் பூச்சிகளை அழிக்கவும் பயிரிலேயே சுமார் பத்து முதல் பதினைந்து நாட்களா வரை தங்கி வேலை செய்ய கூடிய ஊடுருவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். (பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய விஷ/ய/ம் இவைகள்) பயிர்கள் இளமையாய் இருக்கும்போது தெளிப்பது கூட பரவாயில்லை. ஆனால் பயிர்களில் உணவு உற்பத்தி தொடங்கிய பிறகு அவ்வாறு தெளிக்கப்படும் விஷம் பயிரில், தானியத்தில் ஊடுருவி அங்கு தங்கி விடுகிறது.

கைப்பு தொடங்கி, ஓரளவு விளைந்து நிற்கும் காலத்தில் அந்த விளைச்சலை தாக்கும் பூச்சிகளில் இருந்து பயிர்களை காக்க (??!!) அவர்கள் ஊடுருவும் பூச்சிக்கொல்லிகலான சிந்தெடிக் பைரித்ராய்டு வகையை சேர்ந்த சைபர் மெத்ரின், ஆல்பா மெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறார்கள்.. விளைபொருளில் தாங்கும் அந்த விஷம் தன்னுடைய சக்தியை இழக்கும் முன்பாகவே அறுவடை செய்யப்பட்டு நுகர்வோருக்கு செல்கிறது. அதை வாங்கி உட்கொள்ளும் நுகர்வோர் உடலில் அந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கிறது.

விளைவு??
தாய்ப்பாலிலும் விஷம். அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட என்டோசல்பான் என்னும் அதிதீவிர விஷம் இந்தியாவில் தாராளமாய் விற்பனைக்கு உள்ளது. இதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கி இருப்பதன் விளைவே, தாய்ப்பாலில் விஷம், கேன்சர், மலட்டுத்தன்மை எனும் மனித குலத்தை வேரறுக்கும் பல கொடிய வியாதிகள் வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பாலிலேயே விஷம் என்றால் கருப்பையில் வளரும் குழந்தைக்கு எப்படி சுத்தமான சத்துக்கள் கிடைக்கும்?

கொஞ்சம் யோசிப்போம். ஒரு சங்கிலி தொடர் நிகழ்வில் எதிர்கால சந்ததிகளை எப்படி முடக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது புரிகிறதா??

நாம் எப்போது நம் முன்னோர்கள் கற்றுத்தந்த இயற்கை முறைக்கு திரும்ப போகிறோம்??? இதற்கு நவீன கால விஷம் தெளிக்கும் விவசாயியை மட்டும் குறை சொல்லி பயனில்லை.

இயற்கையை அவர்கள் கொண்டாடி பயிர் செய்த காலத்தில் அவர்களை புறக்கணித்து, அவர்களை வறுமையில் தள்ளியவர்கள் நாம் தானே.

இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம். நம் சந்ததிகளை ஊனமிலாமல் உருவாக்குவோம்!!!