உடலில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் மனிதர்கள் இயற்கைக்கு புறம்பாக, ஆரோக்கியமற்ற முறையில் வாழும் வாழ்க்கை முறை தான். இன்றைய நிலைமையில் உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சந்ததிக்கே சவாலாக விளங்குவது குழந்தையின்மைப் பிரச்னை தான் . குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும், ஆண்கள் தரப்பில் முக்கிய காரணம் விந்தணுக்கள் குறைபாடே. விந்தணு குறைபாடு ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிக மோசமான பிரச்சனை. இந்த விந்தணு குறைபாடு உண்டாக முக்கிய காரணம் குடி, புகைப்பிடித்தல் மற்றும் முறைத் தவறிய பழக்கவழக்கங்கள் மட்டுமே.
இப்போதுள்ள சராசரி கணெக்கெடுப்பின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2 சதவீதம் என குறைந்து, இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அரிது என்று அதிர்ச்சியான தகவலையும், ஐயத்தையும் நம் முன் வைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போதைய காலகட்டத்தில் முப்பது வயதிலேயே பல ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் மிகவும் வேதைனையான உண்மை .
விந்தணு குறைபாட்டுக்கு மிக முக்கிய காரணங்களாக அளவுக்கு அதிகமாக புகைத்தல், குடித்தல், துரிதவகை உணவுகள், சுற்றுப்புற மாசு, ப்ளாஸ்டிக் பொருட்கள், தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாததால் உண்டாகும் உடல் பருமன், நீரிழிவு, போதிய தூக்கம் இல்லாதது , அலைகற்றை இணைப்புடன் இருக்கும் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருத்தல், லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது, இறுக்கமான உள்ளாடை, இறுக்கமான ஜீன்ஸ் போன்றவற்றை தொடர்ந்து அணிவது , தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவது, போதிய தூக்கம் இல்லாமை, மன உளைச்சல், ஸ்டெராய்டுகள் உபயோகித்தல், நோய்த்தொற்றுகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு மேலும் ஒரு காரணம்.
இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லாவற்றையும் உடலுக்கு உள்ளேயே அமைத்து மனிதனை படைத்த இறைவன் (அல்லது இயற்கை) விதைப்பைகளை மட்டும் வெளியில் இருக்கும்படி அமைத்த ஆச்சர்யம் ஏனென்றால் , மனித உடல் சூட்டை விட குறைவான சூட்டில் இந்த விதைப்பைகள் இருக்க வேண்டும் என்பதால்தான்... உடலின் வெப்பம் இந்த விதைப்பையில் உருவாகும் உயிரணுக்களை அழித்துவிடும் என்பதாலேயே அது உடலை விட்டு தனியாக வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்...இறுக்கமான உள்ளாடை, இறுக்கமான ஜீன்ஸ் போன்றவற்றை நீண்ட நேரம் அணிவதால், விந்தணுக்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், உற்பத்தி மற்றும் செயல்பாட்டை தடைப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுக்கள் அழிந்துவிடும்.
அதே போல தினமும் தொடர்ச்சியாக வண்டியை ஓட்டுவதும், ஆண்கள் நீண்ட நேரம் மடி கணினியை மடியில் வைத்து வேலை செய்வதும் ,அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விதைப்பையை வெப்பமடையச் செய்து விந்தணுவை அழித்துவிடும்.
அளவுக்கு அதிகமாக புகை மற்றும் குடியினால் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண் ஹார்மோன் அளவு குறைந்து, ஆண்மை குறைபாடு உண்டாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. டெஸ்டோஸ்டிரோனை நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டாலும் விந்தணுக் குறைபாடு உண்டாகும்.
துரிதவகை உணவுகளில் எந்த விதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது. அதில் உள்ள வெறும் கொழுப்புக்கள் விந்தணு குறைபாட்டைத் தான் ஏற்படுத்தும்.
நேரம் கடந்து உறங்குவதால் போதிய தூக்கம் உடலுக்கு கிடைக்காமல், ஆற்றலின்றி சோர்ந்து, சக்தி குறைந்து விந்தணுக்கள் செயல்படும் திறனின்றி போய் விடும்.
ஸ்டெராய்டுகள் அடிக்கடி எடுத்துக் கொள்வது இனப்பெருக்க மண்டலத்திற்கு பெரும் தீங்கை விளைவித்து, விதைப்பையை சுருக்கி, விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும்.
மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் போது, மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விந்தணுவின் உற்பத்தியும் பாதிக்கும். (சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயத்தை பாதிக்கும் என்பது ஒரு தனிக்கதை.)
தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாமல், உடல் பருமனை உண்டாக்கினாலும் விந்தணு உற்பத்தி தடைப்படும். மன அழுத்தம் உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து, விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைந்துவிடும்.
நீரிழிவு நோயால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை விந்தணுவின் தரத்தைக் குறைத்துவிடும்.
ஒரு சிலருக்கு வைரஸ் நோய்த்தொற்றுகளால் கூட விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
மண்ணில் அளவிற்கு அதிகமான இரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்கினால், இன்றைய இளம் தலைமுறையினர் மலடாவார்கள் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இயற்கையோடு கூடிய உணவு பழக்கங்களும், அமைதியும், உடல் பயிற்சியும் மேற்கொண்டு இயற்கையோடு இசைந்து இயற்கை வாழ்வு வாழ முயற்சி செய்வோம் இனி வருங்காலங்களில்.
ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைத்து, துரித உணவை உண்டு, மனப்பாரத்துடன், நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டு நம் சந்ததிகளுக்காக பணம், பொருள் சேர்த்துவைத்தால் மட்டும் போதாது.. அவற்றை அனுபவிக்கவும் வழிவழியாய் தொப்புள் கொடி உறவு தழைக்கவும் சந்ததிகளையும் சேர்க்க வேண்டும்.....!!!