சனி, 5 ஏப்ரல், 2014

சீரகம் / போசனகுடோரி



“ போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் 
காசமிராதக் காரத்திலுண்டிட” – தேரன் வெண்பா 


இந்த போசனகுடோரி ஒரு அருமருந்து... மானிடத்திற்கு இயற்கை கொடுத்த கொடைகளில் ஒன்று... இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும், நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற பேராவலிலும் இதன் சுவையை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்...

சைவ, அசைவ குழம்புகள், கூட்டு, பொரியல் முதல் ரசம் வரை எல்லாவற்றிலும் இந்த போசனகுடோரியை சேர்த்தால் மட்டுமே அதன் சுவையை முழுதாக ரசித்து உண்ணும் அளவிற்கு நாம் குழந்தை முதலே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்...

அதெல்லாம் சரி... என்னமோ புரியாத பாஷைல ஒண்ண சொல்லிட்டு?.. இத நாம தினந்தோறும் சாப்பிட்றோம்னா?.. என்ன அது... நாங்க எப்போதுமே போசனகுடோரின்னு எதையும் குழம்பு ரசத்துல எல்லாம் சேர்த்ததே இல்லன்னு சொல்றீங்கதானே....??

போசன குடோரின்னா வேறொன்னும் இல்லீங்க.. சீரகம் தான் அந்த அருமருந்து.... இந்த சீரகம்தான் பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் தருது.. வந்த நோய்க்கு நிவாரணம் மட்டும் இல்ல.. நோய்கள் வராமலும் தடுக்க கூடியது...
சீரகம் என்னென்ன நோய்களை குணமாக்கும் / தடுக்கும்னு நம்ம முன்னோர்கள் பாட்டாகவே பாடி இருக்காங்க...

“வாந்தியருசிகுன்மம் வாய் நோய் பீலிகமிரைப் பேற்றிருமல் கல்லடைப்பலாஞ்சன்முட்-சேந்தகம்மல்
ஆசனகுடோரியென்னும் அந்தக்கிரகயணியும்
போசன குடோரியுண்ண போம்”
வாந்தி, அருசி, குன்மம், வாய் நோய்கள், இரைப்பு, இருமல், கல்லடைப்பு, குரல் கம்மல், கிரகமணி என பல நோய்களில் இருந்து சீரகம் நம்மை காப்பாற்றும் அருமருந்து என்று இந்த பாடல் விளக்குகிறது.

அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும்

"வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம் 
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம் 

தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு'' -
சட்டைமுனி

பிரபஞ்சம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும் , ஒன்றை ஒன்றும் கட்டுப்படுத்தியும் முறையாக இயங்கினால் மட்டுமே இந்த பிரபஞ்சம் நிலைக்கும். மாறாக.... ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகமானாலோ, குறைந்தாலோ பிரபஞ்சம் சமநிலையை இழக்கும்... உதாரணமாக பஞ்ச பூதங்களில் நெருப்பு குறைவாக இருந்தால் தண்ணீர் அதனை அனைத்து விடும் , தண்ணீர் குறைவாக இருந்தால் நெருப்பு அதனை ஆவியாக்கி விடும் .., நெருப்பு குறைவாக இருந்தால் காற்று அதை அனைத்து விடும் ...., அதே நெருப்பு அதிகமாக இருந்தால் காற்று அதனை ஊதி ஊதி அதிகமாக்கும் ... 

“பூத உடலுக்கு ஐம்பூதமே
நன் மருந்தாம்
பூத நிலை என்னாளும் போற்று” 



நமது உடம்பை ஆட்சி செய்வதும் பஞ்ச பூதங்களேயாகும்.
இந்த பஞ்சபூத சக்திகளும் ஒரு குறிப்பிட்ட அளவில் , கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் . பஞ்சபூதங்களின் அளவில் ஒன்று மாறினாலும் உயிருக்கு ஆபத்து. அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும் என்பதே பொதுவான விதி.

நம் உடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவைகளால் ஆனது. அறுசுவைகளில் ஒரு சுவை குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ மேற்கூறிய உறுப்புகளுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு குறைந்தோ அல்லது கூடியோ பெறப்படும்போது தான் உடலில் பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.


அப்படி உடலில் உறுப்புகள் அதிகமான (அ) குறைவான சக்தியுடன் செயல்பட்டால் அக்குபஞ்சர் புள்ளிகள் மூலம் சக்தியை சமன்படுத்தி உள்ளுறுப்புகளையும் சீராக்கலாம். நம் உடலுக்குள் அமைந்து இருக்கும் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு இருப்பதோடு, உடலின் மேற்பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்படி உள்ளுறுப்புடன் நேரடித்தொடர்புடைய உடலின் மேற்பகுதியில் அழுத்தம் (pressure) கொடுத்தோ, நுண்துளையிட்டோ (puncture) பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பை சரிசெய்து இயங்க வைப்பதே அக்குபஞ்சர் மருத்துவம்.

இயற்கை பல அரிய விஷயங்களை அளித்திருந்தாலும் மனிதன் மட்டுமே மிகப்பெரிய சக்தியாக, அனைத்தையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றவனாக திகழ்கிறான். ஒரு மனிதனின் நிரந்தர மூலதனம் ஆரோக்கியம் மட்டுமே. இயற்கையோடு ஒன்றி வாழும் யாரும் அத்தனை சீக்கிரம் நோய்வாய்ப்படுவதில்லை. ஆனால் இன்றைய சமுதாயம் வாழ்வின் ஆதாரமான ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறது. செலவே இல்லாமல் ஒரு மனிதனால் வீட்டிலேயே ஆரோக்கிய வாழ்வு வாழ முடியுமா என்றால் ..... முடியும். ருசிக்காக உண்ணாமல் பசியறிந்து உண்டு வந்தாலே வியாதியை அப்புறமாக தள்ளி வைக்கலாம்.


ஒரு நோயாளி வந்தாலே அவரின் குணாதிசயங்கள், உணவுப்பழக்கங்கள், போன்றவற்றை வைத்தே அக்குபஞ்சர் முறைப்படி அவரின் வியாதியை அறிந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டுபிடிப்பவரே, மிக சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர். நம் உடலில் தோன்றும் நோயின் காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து அதிலிருந்து விடுபட்ட சீரான உணவு முறையும், பழக்கவழக்கங்களும், ஊசியை உடலின் மேல்பகுதியில் செலுத்தி தடைப்பட்ட இயக்கத்தை சமநிலைப்படுத்தினால் உடல் பூரண குணமாகும்.

அக்குபஞ்சர் மருத்துவமானது மிக சிறப்பான மருந்தில்லா மருத்துவம். உடலில் தோன்றி உள்ள நோயின் மூல காரணத்தை கண்டு சரியான முறையில், முற்றிலும் தீர்வு காண முடியும். ஆனால் இந்த மருத்துவத்தை முழுதும் கற்று அறியாமலும், உண்மையான தத்துவங்களை புரிந்துகொள்ளமலும், உடற்கூறு, அதன் இயக்கங்களை பற்றிய அறியாமையாலும் இன்னும் இதன் வளர்ச்சி முழுமை பெறாமலே இருக்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரு ஊசியைக் கொண்டே ஒரு நோயாளியின் உடலில் தோன்றி உள்ள அனைத்து விதமான நோய்களையும் நீக்கி விட முடியும் . உறுப்புகளின் செயல் குறைபாடே நோயாக வெளிப்படுகிறது. எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதோடு தொடர்புடைய மற்ற உறுப்புகளின் இயக்கம் எந்த அளவில் உள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும், நோயை நெருங்க விடாத தற்காப்பையும் கொடுக்கும் சிறுதான்ய வகைகளை மறந்தும் வாழ்வதால் இன்று நம் அனைவரின் நிலையம் கீழிறங்கிக் கொண்டிருகிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அவற்றில் அறுசுவகளும், உயிர் சக்திக்கு தேவையான மொத்த சத்துக்களும் நிறைந்து உள்ளன.

இதனை உணராமல் இரசாயன மருந்துகளால் நோயை விரைவில் குணமாக்கி, இலவச இணைப்பாய் கொஞ்சம் பக்கவியாதிகளையும் கொடுக்க கூடிய மருந்துகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டு, முறையான உணவுப்பழக்கத்தால் நோய்கள் வராமல் பாதுகாக்கவும், அப்படியான உணவு முறையால் அறுசுவைகளில் ஏதேனும் ஒரு சுவை குறைந்து அதன் மூலம் ஏதேனும் நோய்கள் வந்தாலும் கூட ரசாயன மருந்தின் துணையின்றி அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலமே பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் அவற்றை சரிசெய்து மக்களை நோய் நொடியின்றி வாழவைக்கும் உயர்ந்த நோக்கத்தின் சிறு துளியே என்னுடைய இந்த பங்களிப்பு..!!!

பல் தேய்க்கும் குச்சிகளும் அதன் பயன்களும்



ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி.... என்று கிட்டத்தட்ட அனைவருமே படித்திருப்போம்...

அதாவது ஆலமர குச்சி மற்றும் வேலமர குச்சிகளால் பல் தேய்க்கும் போது பல் உறுதியாக இருக்கும் என்பது இதன் பொருள்.. (நான்கு வரிகளை உடைய "நாலடியார் மற்றும் இரண்டு வரிகளை உடைய திருக்குறள் ஆகியவற்றை கசடற கற்றவர்களால்உறுதியான விவாதங்களை மேற்கொள்ள முடியும் என்பது அந்த பழமொழியின் இரண்டாம் பாக விளக்கம்)

அதே போல "பல்லு போனா சொல்லு போச்சு" என்ற கிராம சொல்வழக்கும் உள்ளது...
பற்களை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் தெளிவான பேச்சையும் பெறலாம்...

நமக்கு தெரிந்த ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி மட்டுமல்லாமல்... பல்வேறு மூலிகை குச்சிகளை கொண்டும் பல் துலக்கலாம்... எந்தெந்த குச்சிகளை கொண்டு பல்துலக்கினால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் தெரிந்துகொள்வோம்...

எருக்கு, நாயுருவி, கருங்காலி, புங்கு, சம்பகம், ஆலகுச்சி, மருது, புரசு, இத்தி, மல்லி, நரிமா, நாவல், மா, அசோகம், அத்தி, வேம்பு, அரசு, கருவேல், ஸரள தேவதாரு, குங்கிலியமரம், மாதுளை, அடைப்பை, அரளி, வாகை, அழிஞ்சில், வேங்கை, இலுப்பை, மூவிலை, இலந்தை, ஆடுதொடா இவற்றை கொண்டு பல் துலக்கி ஈறுகளையும், பற்களையும் பாதுக்காக்கலாம்.

எருக்கு – பல்வலி அகற்றும்.
நாயுருவி – பற்களை நன்கு வளர செய்யும்.
கருங்காலி – பல்வியாதிகளை அகற்றும்.
புங்கு, சம்பகம் – வாய் நாற்றம் அகற்றும்.
ஆலகுச்சி – வாய்ப்புண்களை அகற்றி பற்களை கெட்டிப்படுத்தும்.
மருது – பற்களை சுத்தி செய்யும்.
புரசு – வாயை சுத்தி செய்யும்.
வேம்பு – ருசியளிக்கும்.
அரசு – பல் கூச்சம் நீங்கும்.
கருவேல் – பற்களை பளிச்சென்று ஆகும்.
ஸரள தேவதாரு – பற்களை கெட்டிப்படுத்தும்.

வல்லாரை

வல்லாரை னினிலை மருவுகற்ப மாய்க்கொள் 
வெல்லாப் பணிகளு மிலாமையா மெய்யினில்
அகத்தியர் குணபாடம். 


உடலை நோயின்றி காக்கும் காயகல்ப மூலிகைகள் பலவுண்டு. அனைத்தும் அளவில்லா மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
ஆனால் வல்லாரை மட்டும் பிரம்ம மூலிகை, சரஸ்வதி மூலிகை என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து என அதிக அளவில் முக்கிய சத்துக் களையும், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளையும் உள்ளடைக்கிய ஒரே அரியவகை மூலிகை வல்லாரையே.

தூக்கத்துக்கு மாத்திரை, இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை, நீரிழிவுக்கு மாத்திரை, டென்ஷனுக்கு மாத்திரை, தலைவலிக்கு மாத்திரை, சைனஸ்க்கு மாத்திரை என எதற்கு எடுத்தாலும் மாத்திரை மாத்திரை.. மாத்திரை.... இப்படியே மாத்திரையை விழுங்கி கொண்டு வந்தால் கடைசியில் நமக்கு மிஞ்சுவது நரம்பு தளர்ச்சி தான்.
அறியாமையின் காரணமாகவோ, தவறான வழிகாட்டுதலினாலோ தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுவோருக்கு இயற்கை தரும் அற்புத மூலிகை வல்லாரை. பொதுவாக ஞாபக சக்திக்கு வல்லாரை மிகவும் உதவும் என்பதை ஓரளவுக்கு எல்லோருமே அறிவர். ஆனால் வெறும் ஞாபக சக்திக்காக மட்டுமில்லாமல் இது பல அறிய செயல்களை நம் உடம்பில் நிகழ்த்துகிறது...

இரத்ததை சுத்திகரிக்கும், ஆறாத புண்கள், தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி, உடற்சோர்வு, சீதபேதி, அஜீரணக் கோளாறு, எக்சிமா, பால்வினை நோய்கள், வெண்குஷ்டம், சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம், குடல் புண், குடல்நோய், வாய்ப்புண், வாய் நாற்றம், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, யானைக்கால், காய்ச்சல் போன்ற பல வியாதிகளைப் போக்கும் ஆற்றல் பெற்றது.

"பத்து வல்லாரை இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து" அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் மூளை திசுக்கள் வலுப்பெற்று, நரம்பு தளர்ச்சியை நீக்கி, தளர்வுற்ற தேகத்தை இறுகிப் பலம் பெற செய்யும்.

காசநோய், யானைக்கால், தொழுநோய், வெண்குஷ்டம் போன்ற கொடிய வியாதிகளுக்கும் வல்லாரையே தலைசிறந்த மூலிகை. ஒரே மூலிகையில் மூன்று சுவைகள்... முக்கிய சத்துக்களும் உள்ளடக்கி அது எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தி, ஞாபக சக்தியையும் வளர்க்குமென்றால் இதனை பிரம்ம மூலிகை, சரஸ்வதி மூலிகை என்று சொல்வது சாலப்பொருத்தமான ஒன்றன்றோ...!!!

பாம்பின் விஷம்

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல.... நாமே நேரில் பார்த்து பழகிய மொழியும் கூட.... பாம்புகளில் பல வகைகள் உண்டு என்றாலும் எல்லா பாம்பும் விஷமுடையது அல்ல... ஆனால் பாம்பு என்றாலே விஷம்.. அந்த விஷம் நிச்சயம் மரணத்தை பரிசளிக்கும் என்பது நம் மனதில் ஆழமாய் பதிந்த காரணத்தால் பாம்பை கண்டால் நடுங்குகிறோம்...

தேள், பூரான், பூச்சிகள் என்று பெரும்பாலான பூச்சிகள் கூட விஷத்தன்மை உடையது என்றாலும் கூட பாம்பின் விஷம் மட்டும் மரணத்தை உடனே பரிசளிப்பது ஏன்..?? தொடர்ந்து படித்தால் தெரியும்...


பாம்பின் விஷம், செரிந்த புரோட்டீன்களினால் (highly toxin protein) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரோட்டீன் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் நம் உடல் அமைப்பைப் பொருத்தவரை புரோட்டீன், வைட்டமின், மற்றும் தாதுப் பெருள்கள் யாவும் உணவுப்பொருட்களாக நம் வாயின் மூலம் எச்சிலோடு கரைந்து, வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு, நம் உடலுக்குத் தேவையான புரோட்டீனாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்ற கழிவை எல்லாம் அகற்றிவிட்டு பின் தான் அது இரத்ததில் கலக்கும். ஆனால் பாம்பு கடித்தால் விஷம் (highly protein) இரத்தத்தில் நேரடியாக கலப்பதால் அந்த இரத்தம் உடனே திரிந்து கெட்டிப்பட்டு விடுகிறது. இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரணம் உண்டாகிறது. நம் உடலின் இயல்பிற்கு எதிராக இருப்பதனாலும், நம் உடலின் திசுக்களும், கல்லீரலும், சிறுநீரகங்களும், நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து மரணத்திற்கு வழி வகுக்கின்றது.

பாம்பின் பற்கள் ஒரு டியூப் போல இருக்கிறது.. அதாவது நமக்கு மருத்துவ மனையில் மருந்து ஏற்றும் ஊசியை போல... பாம்பு மனிதனையோ. மற்ற விலங்குகளையோ கடிக்கும் போது பாம்பின் விஷப்பையில் சேமிக்கப்பட்ட விஷம் இந்த பற்குழாய் வழியாக கடிக்கப்பட்ட உயிரினத்தின் இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கிறது... அப்படி கலந்த உடன் அந்த செறிவூட்டப்பட்ட புரோட்டீன் விஷமானது இரத்தத்தை கெட்டித்து , இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தை தடை செய்து , முடிவில் மரணம் நிகழ்கிறது....
பாம்பின் விஷம் இரத்தத்தில் கலந்த உடன் எப்படி கெட்டிப்படுகிறது என்பதை கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி படக்காட்சியாக காணலாம்...
http://www.manithan.com/news/20140215109832

"கண்டது பாம்பு... கடிச்சது கார முள்ளு" என்று கிராமங்களில் ஒரு சொல் வழக்கு உண்டு... அதாவது, ஒரு முள்ளு குத்திய நேரத்தில் அங்கே இருந்து ஒரு பாம்பு ஓடினால் கூட "நம்மை பாம்பு கடித்து விட்டது" என்று பயந்து அந்த பயத்திலேயே உயிர் விட்ட சம்பவங்களும் உண்டு. சில பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை.. ஆனாலும் அது கடித்தால் கூட அந்த பயத்தில் மரணத்தை தழுவியவர்களும் உண்டு...
ஆகவே ஒரு வேளை பாம்பு கடிக்க நேர்ந்தால் பயத்தை தவிர்த்து , கடித்த இடத்திற்கு மேலாகவும், இன்னும் சற்று மேலாகவும் என இரண்டு இடங்களில் கயிற்றால் இறுக கட்டி , கடிபட்ட பகுதியில் இருந்து இரத்தம் மற்ற இடங்களுக்கு பாய்வதை தடுப்பது முதல் உதவியாகும்...

முருங்கை இலை மற்றும் முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

பச்சை கீரைகள் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவைகள் என்றாலும் அவற்றிற்கெல்லாம் மகுடமாய் திகழ்வது முருங்கை கீரை என்றால் மிகையாகாது...

உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்ததும், உடலின் முழு ஆரோக்கியத்தையும் சமன் படுத்தக்கூடியதும், அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் விளங்க கூடிய முருங்கைமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு கிடைத்த வரம்...


முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் ,பலமும் , தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் . முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கைப் பூ செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைப் பூவை நாற்பது நாட்கள் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி சீராகி, இல்லற வாழ்க்கையில் உண்டான இடைஞ்சல்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணமாகும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.

முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையால் வாயுப்பிடிப்பு, மூட்டுவலி குணமாகும்.

கடுமையான இரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாது விருத்தி செய்யும்.

முருங்கை வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு காசநோய், கீழ்வாயு, முதுகுவலியை குணமாக்கும்.

இலை, பூ, மரப்பட்டை, வேர் என மொத்த பாகமுமே மனித குலத்தை நோயிலிருந்து மீட்க பயன்படும் முருங்கை.... நமக்கு கிடைத்த வரம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.

தலையில் நீர்கோர்த்து தலைபாரமா???


தலையில் நீர்கோர்த்து கொண்டு அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய வைத்தியம்...
இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை (வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு) குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் பத்து போட்டால்.... நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர் கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்....



மஞ்சள்-சுண்ணாம்பு பத்துக்கும்.... அக்குபஞ்சருக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்... வேறு ஒரு தேடலின் போது ஒரு சித்தர் தம்முடைய பாடலில் பரி பாஷையில் சொல்லி இருந்ததை இங்கே தெளிவாக சொல்லி இருக்கிறேன்....

புகை நமக்கு பகை – (சிறுநீரகங்கள், மற்றும் சிறு நீர்ப்பை புற்று)

நம் உடல் உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கான வேலைகளை தனித்தனியாக செய்தாலும் கூட அவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டே இயங்குகின்றன... உடல் உறுப்புகளின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவைகள் யாவும் இணைந்து உயிர் காக்கும் கூட்டுமுயற்சியில் தான் இயங்குகின்றன. ஒரு உறுப்பு செயலிழந்தால் அது தொடர்பான மற்ற உறுப்புகளும்..பின் மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கும். இதுதான் உடலின் அடிப்படை தத்துவம்.

சிகரெட் அட்டையில் எழுதி இருக்கும் தார், நிக்கோடின், மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப்பொருட்கள் சுவாச மண்டலத்தின் வழியாக நுரையீரலில் படிந்து கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகளை அள்ளிக்கொடுத்தாலும்.. அவைகளோடு மட்டும் விட்டு விடாமல் இன்னும் பற்பல சிறப்பு பரிசுகளையும் போனஸாக தருகிறது....
இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காச நோய், பக்கவாதம் (ஸ்ட்ரோக்) உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளுடன் இரத்தப்புற்று (Blood Cancer) , நுரையீரல் புற்று (Lung Cancer), கழுத்து புற்று (Neck Cancer), சிறுநீரக மற்றும் சிறு நீர்ப்பை புற்று (Kidney & Urinary Bladder) என வித விதமான புற்றுநோயையும் தருகிறது...

நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் புகைப்பவர்களுக்கு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் வீரியம் குறைதல் , ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் மனோரீதியான பாதிப்புகளையும், தாம்பத்திய வாழ்வில் சிக்கலையும் உருவாக்கி நிம்மதி இழந்து மன உளைச்சலால் தற்கொலை வரை இழுத்து செல்லும்....இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை... ஆனாலும் புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை...

சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்று வர மிக மிக முக்கிய காரணம் புகைதான்... எல்லாம் தெரிந்தும் பலர் புகைப்பதை கவுரவமாகவும், கம்பீரமாகவும் கருதுகிறார்கள்.... தவணை முறையில் தற்கொலை செய்து கொள்ள எப்படி இவர்கள் சந்தோஷமாய் சம்மதிக்கிறார்கள்..

உடலின் சூட்சுமங்கள் - உணர்ந்து சொன்ன சித்தர்கள்...!!!

நம் சித்தர்கள் நம் உடலின் நரம்புகள், அவற்றின் இயக்கங்கள், சுரப்பிகள் (Glands), அவற்றில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் என எல்லாவற்றையும் பற்றி மிக விரிவாக, எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து நமக்கு அருளிச்சென்று இருக்கிறார்கள்...

ஒரு நாளில் ஒரு மனிதன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்றும், அவனது மூளையை 1000 கோடி நரம்புகள் இயக்குகின்றன என்றும் அவர்கள் அன்றே அறிந்து இருக்கிறார்கள்... மேலும், மூளையில் இருக்கும் திசுக்களின் எண்ணிக்கை 1300கோடி , உடலில் இருக்கும் எலும்புகள் 216 , உடம்பின் மொத்த இரத்த குழாய்கள் 700, 555 தசைகள், 72 ஆயிரம் நரம்புகள் ஆகியவை இருக்கிறதென்றும் எவ்வித மருத்துவ உபகரணங்களோ, நவீன கருவிகளோ இன்றி அவர்கள் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள்...

மனித உடலில் இயங்கும் பத்து வகையான காற்றின் செயல்கள் , நரம்பு மண்டலத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் இடகலை, பிங்கலை, தண்டுவடம் பற்றிய அரிய தகவல்கள், அணுக்கள், திசுக்கள், இரத்தத்தின் வேறுபாடுகள், நிறம், குணம் என பல்வேறு மருத்துவ அற்புத தகவல்களை தெள்ள தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்...


அன்று அவர்கள் தங்களின் ஞானத்தால் உணர்ந்து சொல்லிச் சென்றவைகள் எல்லாம்.. இன்றும் நவீன விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ உலகிற்கும் பெரும் சவாலாகவே இருக்கிறது... எந்த வியாதி வந்தாலும் அதற்கு தகுந்த உணவு பழக்கத்தை கையாண்டாலே போதும்.... உடல் தனக்குத்தானே எந்த வியாதியையும் சரி செய்து கொள்ளும் என்று சித்தர்கள் மட்டுமே நமக்கு உணர்த்திச் சென்ற உண்மைகள்.
உடலினை பற்றி நவீன விஞ்ஞானம் கூட புரிந்துகொள்ள முடியாத அரிய தகவல்களை நம் சித்தர்கள் விளக்கி இருப்பது இன்றும் விளங்கிக் கொள்ள முடியாத அதிசயங்கள்.
சித்தர்கள் சொன்னதை இன்றும் கூட வியப்பாய் பார்க்கும் நவீன மருத்துவம் தரும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பக்கவிளைவுகளையும், உடல் உபாதைகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்...
நோயால் பாதிக்கப்பட்ட உடன் பயமும் மன உளைச்சலும் சேர்த்துக்கொண்டு சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற அவசர கோலத்தில் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்து மாத்திரைகளால் உடல் சோர்ந்து சீக்கிரமே எதிர்ப்பு சக்தியை இழந்து வலுவிழந்து போகிறது...
உடல், உயிர், மனம் அனைத்தின் இரகசியங்களையும், சூட்சமங்களையும் புரிந்து வாழ்ந்தால் வாழும் காலம் ஆரோக்கியம் என்பதில் துளியும் ஐயம் இல்லை...

தும்மல்

நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.
மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.
நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் . உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.
ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...



அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.
அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.

சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன்...

சுக்கு - மைக்ரேன் தலைவலிக்கு



மைக்ரேன் எனப்படும் கடுமையான தலைவலியா?
உண்ணும் ஒவ்வொரு உணவிலும் சிறிதளவு சுக்கைச் சேர்த்துக் கொண்டே வந்தால்... மைக்ரேன் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் பறந்தே போகும். சுக்கு காபிக்கு பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். பாலும், சர்க்கரையும் சேர்க்கக் கூடாது.

அக்குபஞ்சரில் ஐம்பூத புள்ளிகள்


அக்குபஞ்சர் என்பது பரம்பரிய சீன மாற்று மருத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகளும் இல்லை. பக்கவிளைவுகளும் இல்லை.
அக்குபஞ்சர் மனித உடலில் உள்ள முக்கியமான (பாதிக்கப்பட்ட உறுப்பின்) புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைச் செலுத்தி உள்ளுறுப்புகளை சரியான முறையில் தூண்டி சீராக செயல்பட வைத்து நோயைக் குணமாக்கும் ஒரு மருந்தில்லா மருத்துவம்.
மேலும் நம் உடலில் உள்ள நாடித்துடிப்பு (Pulse) மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை எளிய முறையில் கண்டறிந்து முற்றிலும் குணமாகக்கூடிய வைத்திய முறையாகும். ஆங்கில மருத்துவம் கைவிட்ட பல நோய்களுக்கு மாற்று மருத்துவ முறைகள் மட்டுமே மிகச் சிறந்த நிரந்தர நிவாரணி மற்றும் தீர்வு என மக்கள் அறிந்து தேடியும் நாடியும் வர ஆரம்பித்து விட்டார்கள்.


அக்குபஞ்சர் முறையில் உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்பின் சக்தி நாளங்களைத் தூண்டுவதால் அவை நரம்பு மண்டலம் மற்றும் வயிற்றின் உள்ளுறுப்புகளை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது. நோய்களுக்கு தீர்வும் கிடைக்கிறது. உடலும் ஆரோக்கியம் பெற்று உறுப்புக்களுக்கு வலிமை கூட்டுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) அக்குபஞ்சர் மருத்துவ முறையை அங்கீகரித்தப் பிறகே பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்பித்து வருகின்றன.

மனிதனின் உடற்கூறுகள் எலும்பு, நரம்பு, தசை, மூட்டு, தோல், என ஐந்து வகைகளாய் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சம் எப்படி நிலம் , நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறதோ... அதே போல நமது உடலும் பஞ்ச பூதங்களால் தான் இயங்குகிறது. இந்த பஞ்ச பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், கட்டுப்படுத்தியும் வைத்திருப்பதையும் மறுக்க இயலாது... நமது உடலும் அப்படித்தான்... இந்த பஞ்ச பூதங்களும் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தி இயங்க வைக்கிறது. இவைகள் சீராக இயங்கும் வரை உடலும் சீராக இயங்கும். இந்த பிரபஞ்சத்திலும், நம் உடலளவிலும் பஞ்சபூதம் சரிவர இயங்காமலோ, அல்லது அதிவேகமாய் இயங்கத் தொடங்கினாலோ அப்போது தான் பிரச்சனைகள் பல ரூபத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும்.

நமது உடலில் மொத்தம் 361 அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன . முக்கியமான 12 உறுப்புகளில் ஒரு உறுப்பிற்கு 5 புள்ளிகள் வீதம் 60 பஞ்சபூத புள்ளிகளை அக்குபஞ்சர் மிக முக்கிய புள்ளிகளாக அடையாளப்படுத்துகிறது... அந்த முக்கியமான 12 உறுப்புகள் யாவை..அவற்றின் செயல்பாடுகள் என்னென்ன... அவற்றில் இந்த பஞ்ச பூத புள்ளிகள் எங்கெங்கு அமைந்திருக்கிறது.... அந்த உறுப்புகளுக்கு வரும் பாதிப்பை இந்த பஞ்ச பூத புள்ளிகளை கொண்டு அக்குபஞ்சர் மருத்துவம் எவ்வாறு சரிசெய்கிறது என்பதை பற்றி எல்லாம் விரிவாக இனி வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்....

இஞ்சி (Ginger)

இஞ்சி நெஞ்செரிச்சல், அஜீரணம், மூட்டுவலி, வீக்கம், குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி, ஜலதோஷம், வறட்டு இருமல்,ஆஸ்துமா என பல வியாதிகளை நீக்கி புத்துணர்ச்சி கொடுத்தாலும்... நாம் உண்ணும் உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை எரித்து, செரிமானத்தை எளிமையாக்கும் மிக முக்கியப் பணியை செய்கிறது இஞ்சி....

டீ, காபி!!!

உணவுக்கு பின் டீ, காபி குடித்தால் ..... உணவில் இருக்கும் இரும்புச் சத்தை உடலோடு கலக்க விடாமல் செய்து, இரத்தச்சோகையை உண்டாக்கி விடும். இனி சாப்பிட்ட பின் டீ, காபி குடிப்பீங்களா?...

அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து!!

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்.....இது தான் உடலின் சங்கேத பாஷை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.
ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...


நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .

இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.


      நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்....நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன??? இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....

நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, கால்சியம், மல்டிவைட்டமின் கலந்த டானிக்கோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது.. ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % வைட்டமின் B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாஷியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், ஜீரண சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்..... அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள். 

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்...உணவு ஒரு முக்கிய காரணமாக .இருக்கும். தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... . நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. உடல் பற்றிய விழிப்புணர்வு மேலும் தொடரும்...