ஆதிகால மனிதனுக்கு எளிதாக கிடைத்த மிகவும் பழமையான உணவு பழங்கள் மட்டுமே. மனிதனுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் பழங்களில் கிடைத்து விடும். பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் உண்டாகும் நோய்கள் அனைத்திற்கும் தீர்வு உண்டு. எப்போதும் நாம் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம். ஆனால் இயற்கைக்கு முரண்பட்டு நாம் செய்யும் காரியங்களே வியாதிகளுக்கு ஆணிவேராக அமைந்தும் விடுகிறது.
பழங்களின் வண்ணங்களும், நிறங்களும், சுவைகளும் அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்தே மாறுபடுகிறது. பொதுவாக அமிலத்தன்மை அதிகமா இருந்தால் புளிப்பு சுவையும், சர்க்கரை சத்து அதிகம் இருந்தால் இனிப்பும், அமிலமும், சர்க்கரையும் சம அளவில் இருந்தால் புளிப்பும், இனிப்பும் கலந்தும் இருக்கும்.
நற்பலன்கள் பலவற்றை தன்னகத்தே குவித்து வைத்துள்ள பழங்களில் நாம் இன்றைக்கு பார்க்கப் போவது அமெரிக்காவை தாயகமாக கொண்ட, இந்தியாவின் நான்காவது சிறந்த பழமாக கருதப்படும், வெப்பமண்டல பகுதியின் ஆப்பிள் என்றழைக்கபடும் கொய்யாவைப் பற்றி தான்.
நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் நெல்லிக்காய்க்கு அடுத்து வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எப்போதும் எங்கும் மிக குறைந்த விலையில் கிடைக்கும் விலை மலிவான பழமான கொய்யாவில் முக்கிய வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
நான்கு ஆப்பிளுக்கு சமமான சத்து ஒரு கொய்யா பழத்தில் இருக்கிறது. கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும். உடலில் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால், கொய்யாவில் நிறைந்துள்ள சத்துக்கள் விஷக்கிருமிகளை உடனே கொன்று விடும்.
அனைத்து நோய்களுக்கும் மூல காரணமே மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் போக எளிய வழி தினம் ஒரு கொய்யா சாப்பிடுவது மட்டுமே. மேலும் மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது. ஆரம்ப காலங்களில் உள்ள மூல நோய்க்கும் இந்த பழமே சிறந்த மருந்து.
இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், செரிமான உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.
கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும். பற்களில் இரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவற்றை சரி செய்து பற்களையும், ஈறுகளையும் வலுவாக்கும். வாய்ப்புண்ணை குணமாக்கும். உடலை குளிர்ச்சியடைச் செய்யும். சொறி, சிரங்கு மற்றும் சரும நோய்களை போக்கும். நரம்புகளை பலப்படுத்தும். அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும். இதய படபடப்பு போக்கும். எலும்புகள் பலப்படும். அறிவுத்திறன் அதிகரிக்கும். மாந்தம், இழுப்பு, வலிப்பு நோய்களுக்கு சிறந்த மருந்து கொய்யா.
இரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் 48 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள அதிக இரும்புச் சத்து இரத்தச் சோகை வராமலும், இரத்தத்தை சுத்திகரித்தும், உடலில் சக்தி ஏற்றும் உணவாகவும் செயல்படுகிறது.
வியாதிகள் பல இருந்தாலும் உலகமே நடுங்கும் வியாதியான புற்றுநோயை கூட தடுக்கும் சக்தி கொய்யாவுக்கு உண்டு. கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளதால், புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொய்யாவில் நிறைந்து இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
நோய்களில் சிக்கியவர்கள், நோய் அண்டமால் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் உண்டு நோயின்றி வாழலாம்!
சிறு பிராயத்தில் தன்னை பெரியமனிதனாக காட்டிக்கொள்ள ஓரிரு வயதை சேர்த்து சொல்வார்கள். ஆனால் 35 வயதை கடந்தவர்களோ சுமார் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் வரை ஒரே வயதை சொல்வார்கள். ஒவ்வொரு வயததிலும் இரண்டாண்டுகளாவது நின்று நின்று தான் போக ஆசை படுவார்கள். வாய் வார்த்தையாக கூட வயதை ஏற விடாமல் இழுத்து பிடித்தாலும் வயது ஏறிக் கொண்டுதான் இருக்கும். அதிலும் வயது ஏற ஏற என்னதான் குறைத்து சொன்னாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காட்டிக் கொடுத்து விடும்..
அது கூட பரவாயில்லை ஆனால் தற்கால இளைஞர்கள் உணவுப்பழக்கங்களாலும், கூடா பழக்கங்களாலும் நிதானமாக வரும் முதுமையை விருந்து வைத்து அழைக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பழங்கால திரைப்படங்களில் முனிவர்கள் காயகல்பம் சாப்பிட்டும், மந்திரவாதி பற்றிய திரைப்படங்களில் தலைச்சன் பிள்ளை, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பலிகொடுத்தும், பிற்கால- சமகால படங்களில் சிறுமியை விவாகம் செய்தும் இளமையை தக்க வைத்துக் கொள்வது போல அவரவர் கற்பனைக்கு ஏற்ப சித்தரித்திருப்பார்கள். அவை எல்லாம் நிஜமா- கற்பனையா என்றெல்லாம் நாம் ஆராயாமல், இந்த கட்டுரையை தொடர்ந்து படித்தால் இளமையை சில காலம் நீட்டித்து தக்க வைக்க சற்றே வழி கிட்டும்.
மாறா இளமையுடன் வாழ யாருக்குத் தான் ஆசை இருக்காது. உச்சி முதல் உள்ளங்கால் வரை வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அழகுசாதன நிலையங்களில் பல இலட்சம்/ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
தற்போதைய காலகட்டங்களில் இருபது வயது நிறைந்த ஆண்/பெண் கூட நாற்பது வயது தோற்றத்தை எளிதில் அடைந்து விடுகிறார்கள். அதிக எடை, சிறுவயதிலே நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இதயநோய்கள், தோலில் சுருக்கம், கண்களில் குழி விழுதல், கருவளையம், வழுக்கை, இளநரை போன்ற பல தொல்லைகளோடே வாழுகின்றனர். நல்ல திடகாத்திரமான உடல்நிலையில் இருப்பவர்களை காண முடிவதில்லை.
இதெற்கெல்லாம் முழுகாரணம் இராசயனம் கலந்த உணவுகள், ஃபாஸ்ட்புட் அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகளுடன், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, உறக்கம் இல்லாமை போன்றவையே. சத்தற்ற உணவும், உடற்பயிற்சியின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.
உடற்பயிற்சி, விளையாட்டு தவிர கல்விக்கூடங்களில் பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது. வீட்டிலும் நாம் குழந்தைகளை விளையாட விடாமல் டியூஷன்க்கு அனுப்பி விட்டு நாமும் வீட்டில் டிவி முன் அமர்ந்துக் கொண்டு விடுகிறோம். மேலும் ஓய்வு மற்றும் விடுமுறை நாட்கள் அனைவருக்குமே மால், தொலைக்காட்சி, இன்டர்நெட் என பெரும்பாலும் பொழுதுகள் கழிந்து விடுகின்றன. வாகனங்கள் நடையை சுத்தமாக மறக்க வைத்து விட்டன. நடைப் பயிற்சி என்பது நோயின் தாக்கத்திற்குப் பின்னோ அல்லது நாற்பது வயதிற்கு பின் தான் என ஒரு முடிவுடன் அனைவரும் வாழ பழகி விட்டனர்.
உடற்பயிற்சியுடன், உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் உணவு வகைகளையும் உண்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம். இளமையாக தக்க வைக்க மிக முக்கிய பங்கு வகிப்பது நெல்லி, ஆரஞ்சு, இஞ்சி, வல்லாரை, கொய்யா, முருங்கை, கருஞ்சீரகம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் நாம் இப்போது ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம். ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் இருபது மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
சில உணவுகள் சாப்பிட்டதும் உடலில் உடனே பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்து, உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து இரத்தம் அசுத்தமடைய செய்துவிடும். பித்த நீர் அதிகமானால் கண்களில் உள்ள நரம்புகளை பாதிக்கப்படும். ஞாபக மறதி, சரும பாதிப்பு, தலைமுடி கொட்டுதல்/நரை போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
இளமையை காக்க ஆரஞ்சு பழம் எந்த அளவில் நமக்கு உபயோகமாக இருக்கிறது என்று பார்க்கலாம். உடலில் பித்த நீர் சுரப்பை சீர்படுத்தவும், அனைத்து சத்துக்களையும் ஒருங்கே கொண்ட ஆரஞ்சு முக்கியமான மருத்துவ குணங்கள் நிறைந்த கனியாகும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன. உடலில் அணுக்கள் நன்கு செயல்பட வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலை புத்துணர்வுடன் செயல்பட வைக்கவும், உடலை இளமைத் தோற்றத்துடன் பாதுக்காக்கும்.
ஆரஞ்சு பழம் நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமான சக்தியை கூட்டும். கழிவுகள் வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சு பழம் பல் சொத்தையை தடுக்கும். நோய்க் கிருமிகளை அழிக்கும். சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், குணமாகும். நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும். கர்ப்ப வாந்தி நிற்கும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் பொருள் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும்.இரத்தத்தின் கெட்டித்தன்மையை குறைத்து நீர்த்துப்போக வைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக சுழற்சி அடைவதால் , இரத்த அணுக்கள் சுமந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகமாகி உடல் உறுப்புகளும், திசுக்களும் பொலிவடையும். உடல் திசுக்கள் பொலிவடைய பொலிவடைய தோல் மினுமினுப்பு கூடும். தோல் மினுமினுப்பு கூட கூட இளமை இழுத்து பிடித்து நிறுத்தி வைக்கப்படும்.
இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற மோசமான நோய்களிடம் இருந்து விடுபட, துரித உணவுவகைகளைத் தவிர்த்து தினமும் ஆரஞ்சு பழங்களை நேரடியாகவோ அல்லது (அ) ஜூஸ்ஸில் தேன் கலந்து (சர்க்கரை சேர்க்காமல்) சாப்பிடலாம்.
என்றும் இளமையுடன் வாழ எளிமையாக கிடைக்கும் ஆரஞ்சுப் பழம் தினமும் உணவில் சேர்ப்போம். ஆரோக்கியத்துடன், மாறா இளமையுடன் வாழ்வோம்
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நிறையபேர் பாதிக்கப்பட்டு, வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உயிர் போகும் வலியால் துடிதுடித்தும் போவதுண்டு.
பொதுவாக மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு. மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு இரத்தம் கசிய கசிய ஆசன வாயின் வழியாக வெளித்தள்ளும். அப்படி தடிமனாகி உட்புறமே இருந்தால் அது உள்மூலம் எனவும், சதை வெளித் தள்ளினால் அது வெளி மூலம் எனவும் குறிப்பிடப்படும்.
முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல் போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில் தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக கூட வாய்ப்புண்டு.
எத்தை தின்றால் பித்தம் தெளியும்? என்று ஒரு பழமொழி சொல்வார்கள். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதையாவது செய்து அதில் இருந்து மீண்டு விட மாட்டோமா என்று துடிப்பார்கள். பேருந்து நிலைய கழிவறை சுவற்றிலும் வாயில் அருகிலும் ஒட்டப்பட்டிருக்கும் மலிவான தாளில் அச்சிடப்பட்ட மஞ்சள், ரோஸ் நிற "மூலம்-பவுத்திரம்" விளம்பரங்களை கண்டு, அவர்களை நாடி மூல வியாதி உபாதைகளை அதிகமாக்கி பெரும் பண இழப்பையும் சந்தித்தவர்கள் பலர் நம்மிலும் உண்டு. வந்தபின் வைத்தியம் செய்வது வேறு. வருமுன் காப்பது வேறு. வருமுன் காத்து விட்டால் அனுபவிக்கும் வேதனையும், செலவு செய்யும் பணமும் மிச்சம். ஆகவேதான் நம் முன்னோர்கள் "வருமுன் காப்பதே சாலச்சிறந்தது" என்று சொல்லி இருக்கிறார்கள்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடலில் வாயுத் தொல்லை, இரத்த அழுத்தம், சிறுநீரகக் குறைபாடு, தோல் நோய்கள், (அரிப்பு, சொறி, சிரங்கு)போன்ற வியாதிகள் தோன்றும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலநோய் பிரச்னையை உருவாக்குகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். மூலநோயானது மனரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். மனம், உடலில் ஒருவித தளர்ச்சி, அடிக்கடி கோபப்படுதல், எரிச்சல், போன்ற அறிகுறிகள் தென்படும்.
மூல நோய் எப்படி வருகிறது?
மலச்சிக்கல், நார்ச் சத்து குறைவான காரம் அதிகமான உணவுவகைகள், அதிக அசைவ உணவுகளை உட்கொள்ளுதல், ஒவ்வாத உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, அடிக்கடி ஃபாஸ்ட் புட் மற்றும் மைதா உணவு வகைகளை உட்கொள்வது, தவறான உணவுப் பழக்கம், புகை மற்றும் மதுப் பழக்கம், அதிக உடல் எடை, தைராய்டு, நீரிழிவு நோய், உடலில் அதிக சூடு, நேரம் தவறிய தூக்கம், ஓய்வே இல்லாத கடுமையான உழைப்பு, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மலம் வரும்போது அடக்குதல் இப்படி பல காரணங்களால் மூல நோய் வரலாம். குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
மேற்கண்டவற்றை தவிர்த்தாலே மூல நோய் வராமல் தடுக்கலாம்...
சரி.. நமது தவறான வாழ்க்கை முறையினாலோ, அறியாமையினாலோ, தவிர்க்க முடியாமலோ மேற்கண்டவற்றை செய்து அதனால் மூலநோயும் வந்துவிட்டது. இனி என்ன செய்யலாம்?
இரவில் ஆழ்ந்த தூக்கம், உடல் சூடு குறைய வாரம் ஒரு முறை மிதமாக சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய் குளியல், சிறுதான்யங்கள், நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் என முறையான வாழ்க்கை முறையும், உணவு முறையும் மூலத்தை கட்டுக்குள் கொண்டு வரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு, பகல் நேரங்களில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும். அகலமான பாத்திரத்தில் சூடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும். தினமும் உணவில் கீரை, பூண்டு, முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் மசாலா உணவுகள், முட்டை, சிக்கன், மீன் என எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது.
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய கூடியவர்கள் பருத்தி துணியிலானான நீள வாக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஒரு பை தயாரித்து, அதனுள் வெந்தயம் நிரப்பி, அதன் மீது அமர்ந்து வேலை செய்தால் மூலத்தை கட்டுப்படுத்தலாம். மலச்சிக்கல் வராமல் இருந்தாலே மூல நோயை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம்.
அக்குபஞ்சர் முறையில் மூலம் முழுவதுமாக குணமாகும். எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர மலச்சிக்கல், மூலம், செரிமானக் கோளாறுகள், உடல் வலி போன்ற வியாதிகளும் தீரும்
இந்தியாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 72000 கல்வெட்டுகளில், 45000 கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் துறையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. (நம்மாழ்வார் சிலை திறப்பு மற்றும், இயற்கை விதை அங்காடி மூன்றாம் ஆண்டு விழாவில் ஆறாம் திணை, ஏழாம் சுவை திரு.சிவராமன் அவர்கள் சொல்லக் கேட்டது)
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, தங்களின் வாழ்க்கை முறை, சமகால வரலாறுகளை அழிந்து விடாமல் பதிவு செய்து, அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களிடம் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கிறது...
அப்படி அவங்க பதிவு பண்ண விஷயங்கள்ல போர் வெற்றிகள், தந்திரங்கள், வாழ்க்கை முறைகள், தொழில்கள் என பல விஷயங்கள் இருக்கும்.. அதெல்லாம் தேவையானவங்க தெரிஞ்சவங்க பார்த்துக்குவாங்க. நாம நமக்கான தகவல்கள் எதுவும் இருக்கா பாக்கலாம்.
கல்வெட்டு காலத்திற்கு போக வேணாம். நம் முன்னோர்கள் என்ன சொன்னாங்கன்னு மட்டுமே பார்க்கலாம். ஆனால் துரதிஷ்ட வசமாக, மேலை கலாச்சாரத்தின் போலித்தனமான வெளிச்சத்தில் சிக்கி அந்த பொக்கிஷங்களை பாதுக்காக்க நாம் மறந்துட்டோம்.
உணவே மருந்து. ஆமாங்க....எப்படி விவசாயம் பண்ணாங்க.. அத எப்படி சாப்பிட்டு ஆரோக்கியமா நூறு வருஷத்துக்கும் மேல வாழ்ந்தாங்கன்னு கூட நமக்கு சொல்லிட்டு தான் போயிருக்காங்க! மூலிகைகள், காய்கறிகள், பழங்கள், கம்பு, வரகு சாமை, திணைன்னு சிறுதான்ய வகைகள், அதன் மருத்துவ குணங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. ஆனா நாம அதை எல்லாம் விட்டுட்டு.. "கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்" "க்ரீமா.. சாக்லேட்டா" ன்னு விளம்பரங்கள்ல மயங்கி ஜிகினா பேப்பர் சுத்தின விஷத்த வாங்கி சாப்பிட்டு சிறுக..சிறுக செத்துகிட்டிருக்கோம்.
நம் முன்னோர்கள் வழிமுறையில் இயற்கை, பஞ்சபூத கோட்பாடுகள், உணவு, தியானம், யோகா போன்றவற்றை புறந்தள்ளாமல், அவர்கள் வழியில் பயணிப்போம். ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கையா கிடைக்கிற மூலிகை மற்றும் உணவு வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவங்கள மாதிரி நூறு வருஷம் வாழாட்டியும், நோய் நொடி இல்லாம வாழும் காலம் ஆரோக்யமா வாழலாமே. (இத சொல்றது நான் தான்)..
பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயதுவரை பலவிதமான மாற்றங்கள் நிகழும். இதனால் பல உடல் உபாதைகளை அவர்கள் சந்தித்தாலும் அது பெரிய அளவில் அவர்களுக்கு மன மாற்றத்தை உண்டு பண்ணாது. ஆனால் 40 வயதை கடந்த பின் பெண்கள் உடலளவில் சந்திக்கும் பற்பல மாற்றங்கள் அவர்களின் மன நிலையையும் மாற்றும்.
.
40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. அதிலும் பெண்கள் வாழ்வில் இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து விடும் அல்லது நின்றுவிடும். அதனால் நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் முறையற்றதாகி, பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். இதற்கு மெனோபாஸ் என்று பெயர். மெனோபாஸ் என்றாலே, தேவையில்லாத பயத்தில் வியாதிகள் வரும் காலம் என்று பலரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த காலக் கட்டத்தில் பெண்கள் அடிக்கடி கூறும் வார்த்தை "மனசே சரியில்லை". வருமானம், பிள்ளைகள் திருமணம், பணப் பிரச்னை, குடும்ப சூழல் என நெருக்கடிகள் நிறைந்த அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும் காலக்கட்டம் அது. பலவிதமான நோய்கள் தேடி வரும் காலமும் கூட. கவலைகளுக்கு இடம் கொடுத்து, உடலில் உட்கார வைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும்.
ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் தோலுக்கு மினுமினுப்பையும், மிருதுத் தன்மையும் கொடுக்கும் கொலேஜன் என்ற புரதம் சார்ந்த நார்ப் பொருள் குறைந்து விடுவதால், தோலில் வறட்சியும், சுருக்கங்களும் ஏற்படுகின்றன. மாதவிலக்கு நிற்கும்போது, மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்வதும் தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல.
இந்த காலங்களில், உடல் கொதிப்பு, இரவில் வியர்வை, பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, உடலுறவின் போது வேதனை, சிறுநீரை அடக்கி வைக்க முடியாமை, நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு முதலிய குறைபாடுகள் தோன்றுகின்றன. புகையிலை பொருட்களை உபயோகித்தல் , புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகும். தனக்கு யாருமில்லை, தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்ற மனநிலையை தாங்களே உண்டாக்கி கொண்டு மன உளைச்சலை வரவைத்துக் கொள்வர். நாற்பதுக்கு மேல் வாழ்க்கை மீதான பயமே மனஅழுத்தமாகி, மன உளைச்சலாகி பல நோய்களை வர காரணமாகி விடும்.
மன அழுத்தத்தால் உடல் எடை, சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் எட்டிப் பார்க்கும். இவற்றை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளாவிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும். மெனோபாஸிற்குப் பிறகு பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலே எலும்புகள் உடையும் நிலை உண்டாகும். நாம் கவனமாக இருந்தால் நோயே இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
மனதை எப்படி ஆரோக்கியமாக வைப்பது?
சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் உள்ள பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நடைப் பயிற்சி, முறையான யோகா, சரிவிகித உணவு போன்றவை உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். வயதான காலத்தில் எதற்கு விலை அதிகம் கொடுத்து துணி வாங்க வேண்டும் என்ற அலட்சியம் தலை தூக்கும். எப்போதுமே ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப உடுத்துகிற உடையில் கவனம் தேவை. பொருத்தமான அழகான உடை உடுத்தி கௌரவமாக, அழகாக இருந்தால் போகுமிடத்தில் எல்லாம் நமக்கு தனி மரியாதையை நாம் உடுத்தும் ஆடைகளே பெற்றுத் தரும். மேலும் ஒருவரின் உடைகளே அவருக்கு மனவலிமையும், தன்னம்பிக்கையும் உண்டாக்கும் என்பது உளவியல் கருத்து.
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். முகத்தை எந்த நேரமும் சிடு, சிடு என்று வைத்துக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருந்தால் முகம் பொலிவோடு விளங்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதை சந்தோஷமாக வைத்து கொண்டால் முக பொலிவு தானாகவே வந்து விடும். காபி, டீ குடிப்பதை தவிர்த்து விட வேண்டும். காற்றோட்டமான இடங்களில் வாழ்வதுடன், இரவில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.
உடல் எடை கூடினால், தோற்றத்தில் முதுமைத் தெரியும். வீட்டிலேயே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையை மாற்றி மனம், உடல் இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டால், எப்போதும் இளமையுடன் ஆரோக்கிய வாழ்வும் வாழலாம். இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்தியத்திற்கான வழிமுறைகள்.
வீட்டில் இருப்பவர்கள் இதற்கு எவ்விதம் உதவலாம்...??
இப்போது உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களுடன் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பில் இருக்கும் யாரும் அக்கம் பக்கம் இருப்பவர்களையோ, ஒரே வீட்டில் உடன் இருப்பவரையோ கண்டுகொள்வதே இல்லை. இது பொதுவாக எல்லோருக்கு நடுவிலும் பெரிய இடைவெளியை என்றாலும், இந்த மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கும்.
எனவே இந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களை கணவனும், குழந்தைகளும் கூடுதல் அரவணைப்புடன் நடத்த வேண்டும். தன்னால் யாருக்கும் உபயோகமில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாக அவர்கள் எல்லோர் மீதும் எரிச்சலடைவார்கள். கோபப்படுவார்கள். இதனை வீட்டில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு எல்லாவற்றிலும் அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் அவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். முக்கியமாக கணவன் கூடுதல் அக்கறையுடனும், அன்புடனும் நடந்துகொண்டால் இவர்களின் மனநிலை தெளிவு பெறும்.
திருமணம் செய்து கொண்டு வந்த காலம் முதலாய், நம்மை பெற்றெடுத்த நாள் முதலாய் நமக்காக உழைத்து உழைத்து களைத்துப் போன அந்த ஜீவனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது அன்புடன் நடத்தி அவர்கள் அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்து அமைதியாய் வாழ நாமும் நம்மாலான உதவிகளை செய்யலாமே....!!!
பெரும்பாலானோரின் காலை மற்றும் இரவு உணவில் தவறாமல் இடம் பிடித்துவிட்ட ஒரு விஷம் தான் மைதா.
நூடுல்ஸ், பரோட்டா, பாஸ்தா, பர்கர் முதல் பேக்கரி ஐட்டங்கள் வரை எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு பொருள். விளம்பரங்களில் வைட்டமின்கள் உள்ளது, மினரல்கள் உள்ளது என்றெல்லாம் சொல்லப்படும் உணவுகளில் எல்லாம் அவர்கள் சொல்வது போல வைட்டமின்களும் மினரல்களும் இருக்கிறதோ இல்லையோ மைதா இருக்கிறது.
இந்த மைதாவை நாம் ஏன் வெள்ளை விஷம் என்று சொல்கிறோம்??
இந்தியாவில் தான் அதிகமாக மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; மைதா மாவில் சத்துப் பொருட்கள் கிடையாது. மஞ்சள் நிறத்தில் வெளி வரும் மைதாவை பளிச்சென்று வெள்ளை நிறம் வருவதற்கு போடப்படும் இரசாயனம் என்வென்று தெரிந்தால் பதறித்தான் போவோம். மைதாவில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் முறையே சோடியம் மெட்டா பை சல்பேட்(sodium meta bi sulphate), பென்சாயிக்(benzoic), சிட்ரிக் அமிலம்(citric acid), அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் என சேர்க்கப்படும் இரசாயன பொருட்கள் அனைத்துமே மனித வாழ்க்கையை அழிக்க வந்தவைகள் என்றாலும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும்.
கோதுமையை நன்கு தீட்டி அரைக்கப்படும் மாவே மைதா. மாவு அரைக்க கோதுமையை தீட்டும்போதே, 76 சதவீத வைட்டமின்களும், தாதுப் பொருட்களும், 97 சதவீதம் நார் சத்தும் போவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகாது.
மைதா மாவை மிருதுவாக்க சேர்க்கப்படும் அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் எனும் வேதிப்பொருள், வேதியியல் ஆய்வின்படி கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்து விடுகிறது. கணையம் செயலிழந்து சர்க்கரை நோய் உண்டாக்குகிறது. பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருள் தலைமுடியை கருப்பாக்க ஹேர் டையில் சேர்க்கப்படுவதுடன் துணிகள் உற்பத்தி செய்யும் ஆலைகளில் துணி நிறம் மாற்ற உபயோகப்படுத்தப்படுகிறது. இது பிரிராடிகல் எனப்படும் புற்றுநோய் தோற்றுவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. இந்த பவுடர் கொஞ்சம் எடுத்து நீரில் கலந்தால் தீப்பொறிகள் தோன்றும். நம் தோலை பாதிக்கும் தன்மை கொண்டது. இத்தனை மோசமான இரசாயனங்கள் தான் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மைதா மாவில் சேர்க்கப்படுகிறது. கேரளாவில் பெருகி வருகின்ற இதயநோய் மற்றும் கேன்சருக்கு அவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் மைதாவில் உள்ள அலாக்சான் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக உள்ளது.
பொதுவாக பேக்கரியே தீங்கு விளைவிக்க கூடிய இரசாயனங்களின் கூடம் தான் . பேக்கரி தொழில் செய்பவர்களை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லச்சொன்னால் அவர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்... ஆனால் வியாபாரம் என்று வரும்போது நாடாவது, மக்களாவது. நலன் என்பதை விட பணம் என்ற ஒன்றின் பின்னால் நாடே செல்லும் போது அவர்கள் மட்டும் எம்மாத்திரம். 90% சதவீதம் பேக்கரியில் செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே மைதவால் தான் உருவாகின்றன.
பரோட்டா, ஃஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத ஃபாஸ்ட்புட் அனைத்து உணவுப் பொருட்களிலும் மைதா தான் உபயோகிக்கிறார்கள். பேக்கரியில் தயாராகும் பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், அனைத்து வகை கேக்குகளும் மைதாவால் ஆனது தான்.
வெறும் மைதா, தண்ணியை மட்டும் சேர்த்து செய்தால் அந்த உணவுப்பொருளில் சுவை கிடைக்காது. அதனால் ஏற்கெனவே விஷமான மைதாவுடன் மேலும் மேலும் விஷம் சேர்க்கப்படுகிறது.
தயாரிக்கும் உணவுக்கு ஏற்ப, பலவகையான கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. சுவையூட்ட சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் முறையே பெயிண்ட் உற்பத்திக்கு தேவையான பெட்ரோலியம் பை ப்ராடுக்ட்ஸ், மினரல் ஆயில்(mineral oil), சுவைகூட்டிகள், அஜினோமோட்டோ, பதப்படுத்திகள்(preservative), டால்டா, சாக்கரின் (500 மடங்கு இனிப்பு சுவையை கூட்டும் இரசாயனம்) என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
இப்படி பட்ட பல வேதிப்பொருட்களை சேர்த்தால் தான் சுவையே கிடைக்கும். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு கூடும். சர்க்கரை நோய், இதய நோய் வரும். இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலினை உற்பத்தி செய்து சீராக வெளியிடும் பீட்டா செல்லை சேதப்படுத்தும். மேலும் கணையத்தை பாதிக்கும். பல முக்கியமான வேலைகளை செய்யும் கணையம் பாதிக்கப்பட்டால் அவர்களை நீரிழிவு நோய் தாக்கும். உடல் எடை அளவில்லாமல் கூட்டும். மைதா உணவை உட்கொள்ள உட்கொள்ள இடுப்பின் சுற்றளவு அதிகரிக்கும்...
சர்க்கரை நோயாளிகளை கோமா நிலைக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் பெற்றது இந்த மைதா! இதய நோய்கள், சிறுநீரக கல், குருட்டுத்தன்மை, மூட்டு ஊனம்(limb amputation) என மிக மோசமான வியாதிகளின் சொந்தக்காரர் தான் நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மைதா.
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்டு கோதுமை மாவை விட கோதுமையை நாமே வாங்கி அரைப்பது தான் சிறந்தது. . உணவில் கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி, எள், சிகப்பு அரிசி, பெருங்காயம், கசகசா போன்ற பொருட்கள் எல்லாம் உடலை வலுவாக்கியது. வாழ்வும் தந்தது. உணவு பழக்க வழக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் பெருகிவரும் நீரழிவு மற்றும் இதய நோய்க்கு காரணங்கள் பற்றி ஆய்வுகள் இப்படி உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் நமது வாழ்க்கைக்கு எதிரியாக மாறுவதை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் இன்றைய சமுதாயத்தை அழித்து கொண்டும் வருகிறது மைதா. ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டு விஷத்தன்மை வாய்ந்த பரோட்டாவை புறம் தள்ளுவோம். தொன்று தொட்டு தமிழக மக்களின் உணவு பழக்கம் உணவே மருந்து என்ற நிலை மாறி வெளிநாட்டு உணவு முறையால் உணவே எமன் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம். நம்முள் நமக்கே தெரியாமல் விஷத்தை கலக்கும் மைதா உணவை அறவே தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.
இன்றைய காலக்கட்டங்களில் திரைப்படங்களிலோ, நாவல்களிலோ சமூக விரோதிகளே ஹீரோவாக சித்தரிக்கப்படுகிறார்கள். க தாநாயகனை விட வில்லனைத்தான் நாம் அதிகம் ரசிக்கிறோம். அவை எல்லாம் பொழுது போக்கு விஷயங்கள். அவற்றை நாம் எளிதில் ஒதுக்கி விட முடியும்..
ஆனால் நம் உண்ணும் உணவில் கூட நச்சுப்பொருட்கள் எல்லாம் சுவை கூட்டும் பொருளாக, அதாவது வில்லன்கள் எல்லாம் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு மிக அதிகமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது.உணவகங்களில் வியாபார யுக்திக்காக சுவையான "விஷத்தை" கலக்குகிறார்கள். அது இலாப நோக்கம். ஆனால் வீடுகளில் தயாராகும் உணவுகளில் கூட நாமே ருசிக்காக விஷத்தை சேர்க்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
இம்மாதிரியான உணவுகள் (விஷங்கள்) பெரும்பாலும் குழந்தைகளை கவரும் விளம்பரங்கள் மூலம் மெல்ல மெல்ல உள்நுழைகிறது... குழந்தைகள் நச்சரித்து பெரியவர்களை வாங்க வைக்கிறார்கள்.. அல்லது அதன் விஷத்தன்மை தெரியாத பெற்றோர் விளம்பரங்களை கண்டு தங்கள் குழந்தைகளுக்கு அந்த விஷம் கலந்த பொருளை வீட்டிலேயே செய்து கொடுக்கிறார்கள்...
இப்படிப்பட்ட ஒரு வில்லக் கதாநாயகன் தான் அஜினமோட்டோ. சுவை கூட்டும், அனைவரையும் சுண்டி இழுக்கும், என்றெல்லாம் விளம்பரத்தில் சித்தரிக்கப்படும் இந்த அஜினமோட்டோ.. ஒரு ஆலகால விஷம்...
மோனோசோடியம் குளூட்டமேட்(MSG) என்ற இந்த இரசாயனம் தான் அஜினோமோட்டோ. இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது. காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சீனா இந்த வேதிப்பொருளை தங்களை விட்டு விரட்டி பலகாலங்கள் ஆனாலும், ஒரு நாட்டின் கழிவுப் பொருளை உணவாக ஏற்றுக்கொண்டு, அதனை பெருமையாக நினைத்து கொண்டாடும் நாம் வழக்கம் போல இந்த விஷத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சில, பல நகரங்களை மட்டுமே தாக்கிக் கொண்டு இருந்த இந்த அபாயம் விளம்பர மாயையின் காரணமாக இயற்கை உணவுகளையே உட்கொண்ட கிராம மக்களையும் தாக்க தொடங்கி இருக்கிறது என்பது தான் வேதனை.
இந்தியாவில் பெரும்பாலும் உணவுப் பொருட்களில் சுவையைக் கூட்டவே இந்த இரசாயனப் பொருள் சேர்க்கபடுகிறது. திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் கூட உணவுப் பொருட்களில் சுவைக்காக இதனை இப்போது கலக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் விருந்து உண்ட உடனே வாந்தி மற்றும் வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.
பிரயாணி, ஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், சிக்கன், மட்டன், மீன் ஃபிரை, பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத ஃபாஸ்ட்புட் உணவகங்களில் கிடைக்கும் அனைத்து பொருட்களிலும் இதன் தாக்கம் உண்டு. பேக்கரியில் தயாராகும் (பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், கேக்) மைதாவால் ஆன அனைத்து உணவுப் பொருட்களிலும் சுவைக் கூட்ட கலக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது விஷத் தன்மை வாய்ந்த அஜினோமோட்டோ தான். உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட்டில் கூட கலக்கப்படுகிறது என்பது தான் மிகவும் கொடுமையான விஷயம். (மைதாவின் உள்ள வேதிப்பொருட்கள், அவை எப்படி ஒரு மனிதனை சிறுக சிறுக கொல்கிறது, அதன் அருமை பெருமைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)
விலை மலிவு, ஆனால் சுவை கூடுதல் எனக் கூறி சாம்பார், ரசம் போன்றவற்றில் கூட இதைக் கலக்கலாம் என விளம்பரம் வேறு வந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் நமக்கு கிடைக்கும் கெடுபலன்கள் கணக்கில் அடங்காதவை.
MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது . ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும் . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டும் இல்லாமல் MSG சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும். மேலும் , தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.
பிறப்புக் கோளாறு, அல்சர், கேன்ஸர் மற்றும் தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, மைக்ரேன் இப்படி பட்ட தலைவலிக்கு எல்லாம் மூலம் அஜினோமோட்டோ மட்டுமே. அதிக வியர்வை, உடலில் திட்டு திட்டாக சிவந்துபோதல், முகவாதம் மற்றும் முகத்தில் உள்ள தசைகள் இறுகிப்போதல், மரத்துபோதல், பற்கள், கண்கள் கூசுதல், முகம், கழுத்து மற்றும் கை, கால்களில் எரிச்சல், வேகமான இதயத்துடிப்பு, அடிக்கடி உண்டாகும் படப்படப்பு, நெஞ்சுவலி, தூக்கமின்மை, உடல் வலுவிழந்து போதல், உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய், சிறுநீரக கற்கள், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சி, மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ எனும் விஷம் நோய்களை அள்ளி தெளிக்கும் அமுதசுரபியாக திகழ்கிறது.
ஆரோக்கிய வாழ்வு வேண்டும் என்று விரும்புவோர் அவசியம் தவிர்க்க வேண்டியவைகள் 1. அஜினோமோட்டோ 2.சர்க்கரை 3.மைதா.
பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறைந்து உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. எடை கூடுகிறது. அலர்ஜி போன்ற பிரச்சனைகளினால் இப்போது பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அஜினோமோட்டோ எனும் இந்த விஷம் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை கட்டுக்குள் வராமல் அதிகரித்துக் கொண்டே போகும்.
திருமூலர் வாக்குப்படி உடல்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று உணவே மருந்தாக இருக்க வேண்டுமே ஒழிய உணவே விஷமாக மாறக்கூடாது. பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பது தான் மருந்தில்லா மருத்துவம். குழந்தைகள் நலன் கருதி அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை தரக்கூடிய உணவுப்பொருட்கள் என்று விற்கப்படும் விஷப்பொருட்களை தவிர்ப்போம். இயற்கை உணவோடு ஆரோக்கியம் காப்போம்
ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது. உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள் தோன்றும் ஒருவகை உணர்ச்சி தான் கவலை.
வேலையை செய்து முடிப்பதில் தாமதம், போக்கு வரத்து நெரிச்சல், தேர்வுகள், பதவி உயர்வு பற்றிய சிந்தனை , போட்டி, பொறமை முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது கவலை தானே தோன்றி விடுகிறது. கவலைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. சிலர் எப்போதும் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும், வேறு சிலர் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கவலைகளில் இரண்டு வகை உண்டு.
1.சுயநலமான கவலை
2.பொதுநலமான கவலை.
மற்றவர்களைப் போல தனக்கும் வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலை. நாளை நம் நிலை என்னவாகுமோ என்ற கவலை.
இப்படியே கவலை நம் மனத்தையும், உடலையும் ஆக்கரமித்து எப்படியெல்லாம் நம் உடலைப் பாதிக்கும் என்பதை இனி பார்ப்போம்.
கவலையால் அதிகம் பாதிப்பை தோல் தான் சந்திக்கிறது. தோல் வியாதிகள்அதிகமாகவும், குணமாகாமலும் இருக்க காரணம் இந்த ஸ்ட்ரெஸ் எனும் கவலை தான். தோலில் மட்டுமே ஸ்கின் ரேஷேஸ் எனப்படும் சிவப்பு திட்டுகள், கொப்புளங்கள், வெடிப்புகள், சொரியாசிஸ், எக்சிமா என்று பலவிதத்தில் வெளிப்படும்.
மேலும் வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள், மனக்கவலை, மன உளைச்சல், கவனச்சிதறல், அமைதியின்மை, முன்கோபம், சிறிய சத்தம் கேட்டால் கூட எரிச்சல் அடைவது, தலைசுற்றல், தலைவலி, அசதி, இதயம் வேகமாக துடித்தல், மூச்சுத் திணறல், அதிக இரத்தஅழுத்தம், இதய நோய்கள், நெஞ்செரிச்சல், அதிகப்படியான கொழுப்பு சேருதல், பெப்டிக் அல்சர், உணவு ஒவ்வாமை, வாந்தி, திடீரென எடை குறைதல்/கூடுதல், இன்சுலின் சுரப்பதில் கோளாறு, நீரிழிவு, உடல் எதிர்ப்பு சக்தி இழத்தல், உடம்பில் எந்த இடத்திலும் திடீரென உண்டாகும் எரிச்சல், வெடிப்பு, தசை வலி, அஜீரணம், பக்கவாதம், வலிப்பு, உடல் நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பேதி, மூட்டுகளில் வலி, மூட்டுகளில் அழற்சி, தோள்பட்டைகளில் வலி, கை, கால்கள் மரத்துபோதல், இடுப்பு வலி, உடலுறவில் ஈடுபாடின்மை, குழந்தையின்மை, தூக்கமின்மை, கனவுத்தொல்லை இதோடு இல்லாமல் இன்னும் தொடரும் நோய்கள் எண்ணிக்கை அதிகம் தானே ஒழிய குறைவில்லை.
வாழும் காலத்தில் தீய சிந்தனைகள், எண்ணங்கள், பொறமை, புறம்பேசுதல், ஏமாற்றுதல் அனைத்தையும் விட்டொழித்தால், கவலையே நம்மைப் பார்த்து குமுறி கவலையுறும்.
எந்த ஒரு விஷயமும் நிலையில்லை. நிரந்தரமுமில்லை. சந்தோஷம், துக்கம் இரண்டுமே வந்த விதத்தில் நம்மை விட்டு அகலும். பிறந்தவர்கள் இறந்து தான் ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நிலையாக இருந்தால் கவலை நம்மை விட்டு விலகியோடும். இந்நிலையில் கவலையை நாம் ஏன் விடாமல் சுமக்க வேண்டும். இனி சுமப்பதா, இல்லை தூக்கி வீசுவதா என்ற முடிவு இனி உங்கள் கைகளில்!
சந்தோஷமும், துக்கமும் சாமியாரிடமும், டாக்டரிடமும் இல்லை. எல்லாமே நமக்குள்ளே, நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன. வேறெங்குமில்லை நமக்குள்ளே தேடினாலே போதும்.
தீர்வு: பிராணயாமம், சுவாசப் பயிற்சி, தியானம், கற்பனைகள், நல்ல புத்தகங்கள், எளிய உடற்பயிற்சி, நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே
ஒருமுறை அக்பரும் பீர்பாலும் உலாவ சென்ற பொழுது ஒரு பேச்சு எழுந்தது.... அக்பர் கேட்டார்... "நமது நாட்டில் எந்த தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள்? விவசாயமா.. வியாபாரமா.. படைத் தொழிலா?( படை வீரர்கள்)..
பீர்பால் சொன்னார்... "நீங்கள் சொல்லும் எந்த தொழிலும் இல்லை மன்னா.. நம் மக்களில் அதிகப்படியானோர் மருத்துவர் வேலை செய்கிறார்கள்.
அக்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை... "நம் நாட்டில் அவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்களா... பீர்பால்.. உனக்கு சித்தம் எதுவும் கலங்கி விட வில்லையே...?"
"இல்லை மன்னா... நீங்கள் கேட்டீர்கள் .. நான் பதில் சொன்னேன்.. அவ்வளவுதான்..."
"வர வர உனக்கு மூளை மழுங்கிக்கொண்டே போகிறது.." என்று சொல்லிவிட்டு அக்பர் போய் விட்டார்...
மறுநாள் அரசவை கூடிய பொழுது.. மந்திரி பிரதானிகள் எல்லோரும் அங்கே வந்து விட்டார்கள்.. ஆனால் பீர்பால் மட்டும் வரவில்லை... அக்பர் "பீர்பால் எங்கே..?" என கேட்டார்...
"அவருக்கு கடுமையான காய்ச்சல்.. அதனால் வரவில்லை.. என தகவல் வந்தது மன்னா.." என்று சேவகன் சொன்னான்..
"இதற்காகவா பீர்பால் அரசவை கூட்டத்தை புறக்கணிக்கிறார்... ஒரு சுக்கு கஷாயம் போட்டு குடித்துவிட்டால் காய்ச்சல் போய்விட போகிறது.. நீ உடனே சென்று பீர்பாலை அழைத்து வா..."
சிறிது நேரத்தில் கம்பளிகளை அள்ளி போர்த்தியபடி , நடுங்கிக்கொண்டே பீர்பால் அரண்மனைக்குள் வந்தார்...
அவரை கண்ட அக்பர்... அடடா... உனக்கு நடுங்குகிறதே... குளிர் காய்ச்சல் போல.. இதற்கு நீ சுக்குவுடன் கொஞ்சம் கொத்துமல்லியையும் சேர்த்து...." என்று சொல்ல ஆரம்பித்த உடன்... பீர்பால்.."நூற்று நாற்பத்தேழு...." என்றார்...
அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை... "என்னது நூற்று நாற்பத்தேழு?" என்று வினவினார்...
"ஆம் மன்னா...நான் காய்ச்சல் என்று சொன்னதில் இருந்து.. என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், தெருவில் பார்த்தவர்கள், வாயில் காப்போன், அரண்மனை சேவகன் என இதுவரை நூற்று நாற்பத்தாறு பேர் வைத்தியம் சொல்லி இருக்கிறார்கள்... இப்போது அரசர் வேலையை விட்டுவிட்டு நீங்களும் வைத்தியர் வேலை செய்ய வந்துவிட்டீர்கள்... இப்போது புரிகிறதா.. நம் நாட்டில் எந்த தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள் என்பது..." என கேட்டார். அப்போதுதான் அக்பருக்கும் புரிந்தது...
மேற்கண்ட கதை வெறும் நகைச்சுவைக்காக அல்ல... முழுக்க முழுக்க உண்மை.
இக்காலத்தில் காய்ச்சல், தலைவலி முதல் கேன்சர், கிட்னி ஃபெய்லியர் வரை எந்த நோய் வந்தாலும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் செய்துகொள்கிறார்கள்.. அனாசின், நோவால்ஜின் ஆக்ஷன் 500 முதல்... கூகுளில் தேடி ஆஸ்ப்ரின், பெண்டாமஸ்டின் (Bendamustine is used to treat chronic lymphocytic leukemia (CLL) and non-Hodgkin lymphoma, and may be used for other types of cancer.) வரை மக்களே மருந்துகளை உட்கொள்கிறார்கள்.. அல்லது மற்றவருக்கு பரிந்துரைக்கிறார்கள்...
முறையாக படித்து, அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளிலேயே பக்க விளைவுகள் என்ற பெயரில் உறுப்புகள் பாழாகும் போது, இப்படியான இன்ஸ்டன்ட் மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துகளை உட்கொண்டால், உட்"கொல்லும்" என்பது தெரிந்த விஷயம் தானே....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியான உடல் வாகு உண்டு... இரண்டு பேருக்கு ஒரே வியாதி இருந்தாலும் அதன் மூலக்காரணம் வேறாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது பக்க விளைவுகள் நிரம்பிய பெட்டிக்கடை மாத்திரைகளையும், கூகுளில் யாரோ பதிவிட்ட தகவல்களின் அடிப்படையிலான மாத்திரைகளையும் அது நமக்கு ஒத்து வருமா என்பதை அறியாமலேயே உட்கொண்டு பக்க விளைவுகளை வாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?
ஆனால் நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள் சொல்லிச்சென்ற உணவு மருத்துவம், பாரம்பரிய வைத்தியங்கள், மூலிகை மருந்துகள் அப்படி அல்ல... எந்த உடலுக்கும் எந்த சீதோஷ்ண நிலைக்கும் ஏற்புடையது... பக்க விளைவுகள் இல்லாதது...
சித்தர்களா? நவீன மருத்துவரா?
மருந்துகளே இல்லாத உணவு முறைகளுடன் கூடிய அக்குபஞ்சர் மருத்துவமா?
அல்லது
வாழும் வரை மாத்திரைகளோடு வாழ வைக்கும், பக்க விளைவுகளை கொட்டித்தரும் மருந்துகளோடு கூடிய மருத்துவமா?
இப்போது நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்