செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஆபத்தின் முழு உருவம் அஜினோமோட்டோ

இன்றைய காலக்கட்டங்களில் திரைப்படங்களிலோ, நாவல்களிலோ சமூக விரோதிகளே ஹீரோவாக சித்தரிக்கப்படுகிறார்கள். க தாநாயகனை விட வில்லனைத்தான் நாம் அதிகம் ரசிக்கிறோம். அவை எல்லாம் பொழுது போக்கு விஷயங்கள். அவற்றை நாம் எளிதில் ஒதுக்கி விட முடியும்.. 

ஆனால் நம் உண்ணும் உணவில் கூட நச்சுப்பொருட்கள் எல்லாம் சுவை கூட்டும் பொருளாக, அதாவது வில்லன்கள் எல்லாம் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு மிக அதிகமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது.உணவகங்களில் வியாபார யுக்திக்காக சுவையான "விஷத்தை" கலக்குகிறார்கள். அது இலாப நோக்கம். ஆனால் வீடுகளில் தயாராகும் உணவுகளில் கூட நாமே ருசிக்காக விஷத்தை சேர்க்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?





இம்மாதிரியான உணவுகள் (விஷங்கள்) பெரும்பாலும் குழந்தைகளை கவரும் விளம்பரங்கள் மூலம் மெல்ல மெல்ல உள்நுழைகிறது... குழந்தைகள் நச்சரித்து பெரியவர்களை வாங்க வைக்கிறார்கள்.. அல்லது அதன் விஷத்தன்மை தெரியாத பெற்றோர் விளம்பரங்களை கண்டு தங்கள் குழந்தைகளுக்கு அந்த விஷம் கலந்த பொருளை வீட்டிலேயே செய்து கொடுக்கிறார்கள்...

இப்படிப்பட்ட ஒரு வில்லக் கதாநாயகன் தான் அஜினமோட்டோ. சுவை கூட்டும், அனைவரையும் சுண்டி இழுக்கும், என்றெல்லாம் விளம்பரத்தில் சித்தரிக்கப்படும் இந்த அஜினமோட்டோ.. ஒரு ஆலகால விஷம்...

மோனோசோடியம் குளூட்டமேட்(MSG) என்ற இந்த இரசாயனம் தான் அஜினோமோட்டோ. இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது. காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சீனா இந்த வேதிப்பொருளை தங்களை விட்டு விரட்டி பலகாலங்கள் ஆனாலும், ஒரு நாட்டின் கழிவுப் பொருளை உணவாக ஏற்றுக்கொண்டு, அதனை பெருமையாக நினைத்து கொண்டாடும் நாம் வழக்கம் போல இந்த விஷத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சில, பல நகரங்களை மட்டுமே தாக்கிக் கொண்டு இருந்த இந்த அபாயம் விளம்பர மாயையின் காரணமாக இயற்கை உணவுகளையே உட்கொண்ட கிராம மக்களையும் தாக்க தொடங்கி இருக்கிறது என்பது தான் வேதனை.

இந்தியாவில் பெரும்பாலும் உணவுப் பொருட்களில் சுவையைக் கூட்டவே இந்த இரசாயனப் பொருள் சேர்க்கபடுகிறது. திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் கூட உணவுப் பொருட்களில் சுவைக்காக இதனை இப்போது கலக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் விருந்து உண்ட உடனே வாந்தி மற்றும் வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

பிரயாணி, ஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், சிக்கன், மட்டன், மீன் ஃபிரை, பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத ஃபாஸ்ட்புட் உணவகங்களில் கிடைக்கும் அனைத்து பொருட்களிலும் இதன் தாக்கம் உண்டு. பேக்கரியில் தயாராகும் (பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், கேக்) மைதாவால் ஆன அனைத்து உணவுப் பொருட்களிலும் சுவைக் கூட்ட கலக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது விஷத் தன்மை வாய்ந்த அஜினோமோட்டோ தான். உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட்டில் கூட கலக்கப்படுகிறது என்பது தான் மிகவும் கொடுமையான விஷயம். (மைதாவின் உள்ள வேதிப்பொருட்கள், அவை எப்படி ஒரு மனிதனை சிறுக சிறுக கொல்கிறது, அதன் அருமை பெருமைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)

விலை மலிவு, ஆனால் சுவை கூடுதல் எனக் கூறி சாம்பார், ரசம் போன்றவற்றில் கூட இதைக் கலக்கலாம் என விளம்பரம் வேறு வந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் நமக்கு கிடைக்கும் கெடுபலன்கள் கணக்கில் அடங்காதவை.

MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது . ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும் . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டும் இல்லாமல் MSG சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும். மேலும் , தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.

பிறப்புக் கோளாறு, அல்சர், கேன்ஸர் மற்றும் தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, மைக்ரேன் இப்படி பட்ட தலைவலிக்கு எல்லாம் மூலம் அஜினோமோட்டோ மட்டுமே. அதிக வியர்வை, உடலில் திட்டு திட்டாக சிவந்துபோதல், முகவாதம் மற்றும் முகத்தில் உள்ள தசைகள் இறுகிப்போதல், மரத்துபோதல், பற்கள், கண்கள் கூசுதல், முகம், கழுத்து மற்றும் கை, கால்களில் எரிச்சல், வேகமான இதயத்துடிப்பு, அடிக்கடி உண்டாகும் படப்படப்பு, நெஞ்சுவலி, தூக்கமின்மை, உடல் வலுவிழந்து போதல், உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய், சிறுநீரக கற்கள், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சி, மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ எனும் விஷம் நோய்களை அள்ளி தெளிக்கும் அமுதசுரபியாக திகழ்கிறது.

ஆரோக்கிய வாழ்வு வேண்டும் என்று விரும்புவோர் அவசியம் தவிர்க்க வேண்டியவைகள் 1. அஜினோமோட்டோ 2.சர்க்கரை 3.மைதா.

பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறைந்து உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. எடை கூடுகிறது. அலர்ஜி போன்ற பிரச்சனைகளினால் இப்போது பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அஜினோமோட்டோ எனும் இந்த விஷம் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை கட்டுக்குள் வராமல் அதிகரித்துக் கொண்டே போகும்.

திருமூலர் வாக்குப்படி உடல்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று உணவே மருந்தாக இருக்க வேண்டுமே ஒழிய உணவே விஷமாக மாறக்கூடாது. பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பது தான் மருந்தில்லா மருத்துவம். குழந்தைகள் நலன் கருதி அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை தரக்கூடிய உணவுப்பொருட்கள் என்று விற்கப்படும் விஷப்பொருட்களை தவிர்ப்போம். இயற்கை உணவோடு ஆரோக்கியம் காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக