செவ்வாய், 14 அக்டோபர், 2014

என்றென்றும் இளமைக்கு ஆரஞ்சு பழம்

சிறு பிராயத்தில் தன்னை பெரியமனிதனாக காட்டிக்கொள்ள ஓரிரு வயதை சேர்த்து சொல்வார்கள். ஆனால் 35 வயதை கடந்தவர்களோ சுமார் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் வரை ஒரே வயதை சொல்வார்கள். ஒவ்வொரு வயததிலும் இரண்டாண்டுகளாவது நின்று நின்று தான் போக ஆசை படுவார்கள். வாய் வார்த்தையாக கூட வயதை ஏற விடாமல் இழுத்து பிடித்தாலும் வயது ஏறிக் கொண்டுதான் இருக்கும். அதிலும் வயது ஏற ஏற என்னதான் குறைத்து சொன்னாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காட்டிக் கொடுத்து விடும்..

அது கூட பரவாயில்லை ஆனால் தற்கால இளைஞர்கள் உணவுப்பழக்கங்களாலும், கூடா பழக்கங்களாலும் நிதானமாக வரும் முதுமையை விருந்து வைத்து அழைக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.



பழங்கால திரைப்படங்களில் முனிவர்கள் காயகல்பம் சாப்பிட்டும், மந்திரவாதி பற்றிய திரைப்படங்களில் தலைச்சன் பிள்ளை, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பலிகொடுத்தும், பிற்கால- சமகால படங்களில் சிறுமியை விவாகம் செய்தும் இளமையை தக்க வைத்துக் கொள்வது போல அவரவர் கற்பனைக்கு ஏற்ப சித்தரித்திருப்பார்கள். அவை எல்லாம் நிஜமா- கற்பனையா என்றெல்லாம் நாம் ஆராயாமல், இந்த கட்டுரையை தொடர்ந்து படித்தால் இளமையை சில காலம் நீட்டித்து தக்க வைக்க சற்றே வழி கிட்டும்.

மாறா இளமையுடன் வாழ யாருக்குத் தான் ஆசை இருக்காது. உச்சி முதல் உள்ளங்கால் வரை வயது கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அழகுசாதன நிலையங்களில் பல இலட்சம்/ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
தற்போதைய காலகட்டங்களில் இருபது வயது நிறைந்த ஆண்/பெண் கூட நாற்பது வயது தோற்றத்தை எளிதில் அடைந்து விடுகிறார்கள். அதிக எடை, சிறுவயதிலே நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இதயநோய்கள், தோலில் சுருக்கம், கண்களில் குழி விழுதல், கருவளையம், வழுக்கை, இளநரை போன்ற பல தொல்லைகளோடே வாழுகின்றனர். நல்ல திடகாத்திரமான உடல்நிலையில் இருப்பவர்களை காண முடிவதில்லை.

இதெற்கெல்லாம் முழுகாரணம் இராசயனம் கலந்த உணவுகள், ஃபாஸ்ட்புட் அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகளுடன், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, உறக்கம் இல்லாமை போன்றவையே. சத்தற்ற உணவும், உடற்பயிற்சியின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி, விளையாட்டு தவிர கல்விக்கூடங்களில் பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது. வீட்டிலும் நாம் குழந்தைகளை விளையாட விடாமல் டியூஷன்க்கு அனுப்பி விட்டு நாமும் வீட்டில் டிவி முன் அமர்ந்துக் கொண்டு விடுகிறோம். மேலும் ஓய்வு மற்றும் விடுமுறை நாட்கள் அனைவருக்குமே மால், தொலைக்காட்சி, இன்டர்நெட் என பெரும்பாலும் பொழுதுகள் கழிந்து விடுகின்றன. வாகனங்கள் நடையை சுத்தமாக மறக்க வைத்து விட்டன. நடைப் பயிற்சி என்பது நோயின் தாக்கத்திற்குப் பின்னோ அல்லது நாற்பது வயதிற்கு பின் தான் என ஒரு முடிவுடன் அனைவரும் வாழ பழகி விட்டனர்.

உடற்பயிற்சியுடன், உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் உணவு வகைகளையும் உண்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம். இளமையாக தக்க வைக்க மிக முக்கிய பங்கு வகிப்பது நெல்லி, ஆரஞ்சு, இஞ்சி, வல்லாரை, கொய்யா, முருங்கை, கருஞ்சீரகம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் நாம் இப்போது ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம். ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் இருபது மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

சில உணவுகள் சாப்பிட்டதும் உடலில் உடனே பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்து, உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து இரத்தம் அசுத்தமடைய செய்துவிடும். பித்த நீர் அதிகமானால் கண்களில் உள்ள நரம்புகளை பாதிக்கப்படும். ஞாபக மறதி, சரும பாதிப்பு, தலைமுடி கொட்டுதல்/நரை போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

இளமையை காக்க ஆரஞ்சு பழம் எந்த அளவில் நமக்கு உபயோகமாக இருக்கிறது என்று பார்க்கலாம். உடலில் பித்த நீர் சுரப்பை சீர்படுத்தவும், அனைத்து சத்துக்களையும் ஒருங்கே கொண்ட ஆரஞ்சு முக்கியமான மருத்துவ குணங்கள் நிறைந்த கனியாகும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன. உடலில் அணுக்கள் நன்கு செயல்பட வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலை புத்துணர்வுடன் செயல்பட வைக்கவும், உடலை இளமைத் தோற்றத்துடன் பாதுக்காக்கும்.

ஆரஞ்சு பழம் நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமான சக்தியை கூட்டும். கழிவுகள் வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சு பழம் பல் சொத்தையை தடுக்கும். நோய்க் கிருமிகளை அழிக்கும். சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், குணமாகும். நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும். கர்ப்ப வாந்தி நிற்கும். நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் பொருள் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும்.இரத்தத்தின் கெட்டித்தன்மையை குறைத்து நீர்த்துப்போக வைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக சுழற்சி அடைவதால் , இரத்த அணுக்கள் சுமந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகமாகி உடல் உறுப்புகளும், திசுக்களும் பொலிவடையும். உடல் திசுக்கள் பொலிவடைய பொலிவடைய தோல் மினுமினுப்பு கூடும். தோல் மினுமினுப்பு கூட கூட இளமை இழுத்து பிடித்து நிறுத்தி வைக்கப்படும்.

இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற மோசமான நோய்களிடம் இருந்து விடுபட, துரித உணவுவகைகளைத் தவிர்த்து தினமும் ஆரஞ்சு பழங்களை நேரடியாகவோ அல்லது (அ) ஜூஸ்ஸில் தேன் கலந்து (சர்க்கரை சேர்க்காமல்) சாப்பிடலாம்.

என்றும் இளமையுடன் வாழ எளிமையாக கிடைக்கும் ஆரஞ்சுப் பழம் தினமும் உணவில் சேர்ப்போம். ஆரோக்கியத்துடன், மாறா இளமையுடன் வாழ்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக