புதன், 14 ஜனவரி, 2015

இரத்த அழுத்தமும், பக்கவாதமும் - தொடர்ச்சி

இரத்த அழுத்தமும், பக்கவாதமும் - தொடர்ச்சி 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
நமது முந்தைய பதிவில் பக்கவாதம் பற்றி விரிவாகவும், அதன் காரணங்களையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

மனிதனுக்கு பாதிப்புகள் அதிகம் தரும் வியாதிகளில் மிக முக்கியமானது அதிக இரத்த அழுத்தம் (அ) ஹைப்பர் டென்ஷன். அறிகுறிகளே இல்லாமல் மரணத்தை கொடுப்பதால் இந்த வியாதிக்கு "சைலென்ட் கில்லெர்" என்றும் பெயருண்டு.

தவறான உணவு முறையால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் இரததக்குழாய்களின் உட்புற அளவு (டயா) குறைந்து விடும். இதனால் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும் இரத்தம் அதிக அழுத்தத்துடன் செல்லும். இதை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாயின் வாய் பகுதியை அடைத்து லேசாக திறந்தால் தண்ணீர் மிகுந்த அழுத்தத்துடன் வேகமாக வெளியேறும். அதே போலத்தான் இதுவும். இந்த அழுத்தம் அதிகமாகும் போது மூளைப்பகுதிக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் மிக மெல்லிய இரத்தக்குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடிக்கும். இதனால் மூளைப்பகுதியுள் இரத்தம் உறைதல், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது.

கொழுப்பு நிறைந்த துரித உணவு முறையின் காரணமாகவும், உடல் உழைப்பே இல்லாததாலும், ஓடி ஆடி விளையாடாமல் கணிப்பொறி விளையாட்டுகளில் கவனம் செலுத்தி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் சிறு வயதிலேயே இரத்த அழுத்தப் பிரச்சினை தோன்றுகிறது. இரத்த அழுத்தம் உருவாக மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும், நீண்ட நாள் சர்க்கரை வியாதியும் காரணமாக அமைந்து விடுகிறது. இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அதிபயங்கர உயிர் பறிக்கும் வியாதிகளுடன், பற்பல இதய நோய்கள், சிறுநீரக வியாதிகள் போன்றவையும் சேர்ந்து விடுகிறது.

பொதுவாக பக்கவாதம் உடலை தாக்கும் முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி, சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போதே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இது போன்ற பிரச்சினைகள் வருமுன்னே தடுக்க, அதிக உடல் எடையை குறைக்க, உணவில் கவனம் செலுத்துவதுடன் உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
.
வியாதி வந்த பின் சரி செய்வது என்பது நீண்ட காலம் எடுக்கும். அதனால் இந்த வியாதி எதனால் வரும் என்று ஆராய்ந்து அதற்கு முறையான உணவு முறைகளை மேற்கொண்டாலே வியாதி வராமலும், வந்த வியாதியிலிருந்தும் மீளலாம். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் எளிய உடற்பயிற்சிகள், மற்றும் சரிவிகித சத்துணவும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும்.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள உணவு வகைகளையும், குறைந்த புரதச்சத்துக்கள் உள்ள உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டால் இந்த வியாதி வராமலே தடுக்கலாம். பழங்களில் திராட்சை, புற்றுப்பழம், ஈச்சம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி அதிகளவு பிராண சக்தி நிறைந்த, நோயெதிர்ப்பு தன்மை நிறைந்த பழங்களாகும்.

நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புதினா, சின்ன வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி இலை, கோதுமை, சிறு கீரை இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது.

இந்த வியாதியை போக்க, வராமல் தடுக்க அதிக பொட்டசியம் நிறைந்த பச்சை நிற காய்கறிகள், இலைக்கோசு, புரோக்கோலி, முள்ளங்கிகீரை, சீமை பரட்டைக்கீரை மற்றும் கீரை வகைகளில் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் சிறந்த உணவாகும்.

மிக எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க கூடிய வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உண்டு. சீரகம், எலுமிச்சை, கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய், கல்யாண முருங்கைக் கீரை, நெல்லிகாய், வாழைப்பழம், பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகள், பச்சை நிற காய்கறிகள் போன்ற உணவுகளே மருந்தாக செயல்படுகிறது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பக்க விளைவுகள் இல்லாமலும் உடல் நலத்துடன் செயல்பட மருந்து மாத்திரைகளை புறம்தள்ளி உணவே மருந்தாக பயன்படுத்தி பலன் பெறலாம்.

உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

கம்பு, வரகு, சாமை, திணை, சோளம் கேழ்வரகு, பார்லி, கோதுமை, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் தினமும் ஒரு வேளையும், பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகை, மது, போதைப்பொருள்கள், மைதா உணவு வகைகள், நெய், எண்ணெய் மிகுந்த பலகாரங்கள், பீசா, பர்கர் பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள் தவிர்க்க வேண்டும். உணவில் சேர்க்கும் எண்ணெயின் அளவை குறைப்பதுடன், உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம், அசைவ உணவு எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய தானிய வகைகளை காலை உணவோடு எடுத்துக் கொண்டால் உடல் இளைப்பதோடு மட்டுமில்லாமல், இரத்த ஓட்டத்தை சீராக்கி, கைகால் மரத்து போதல், வாதத்தினால் உண்டாகும் கை கால் தளர்ச்சி, முக வாதம் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நற்பலன்களை தரும்.
இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
பீட்ரூட் ஜூஸ் (சர்க்கரை, பால் சேர்க்க கூடாது) குடிப்பதால் இரத்த அழுத்தம் ஒரே நாளில் சீராகும். பீட்ரூட்டை சமைத்தும் உண்ணலாம்.

தினமும் நடைப்யிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம், யோகா என மன அழுத்தமில்லாமல் இருந்தால் எந்த வியாதியும் நம்மை அண்டாது.

உணவோடு கூடிய அக்குபஞ்சர் முறையில் இந்த வியாதியை முற்றிலும் குணமாக்கலாம். எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர கல்லீரல், செரிமான உறுப்புகள், இதயம் போன்றவை பலப்படும். கண்களும் வலுவைடையும். இரத்த அழுத்தத்தால் உண்டாகும் பல உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வரலாம். மேலும் படத்தில் காட்டியுள்ளபடி கைகளை பின்பக்கம் வைத்துக் தலையைத் தாங்கிப் பிடிப்பதால் தோள்பட்டை வலி, அதிக நேரம் கம்யூட்டர் பார்ப்பதால் வரும் கழுத்து வலிகள் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நம்முடைய அனைத்து பதிவுகளிலும் சொல்வதை போல நம் பாரம்பரிய உணவு வகைகளையும், பச்சை காய்கறிகளையும் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும், நம் உடல் உள்ளுக்குள் இருக்கும் நோய்களை அறிகுறிகளாய் வெளிப்படுத்துவதை நன்கு கவனிப்பதன் மூலமும் மட்டுமே நம்மை நோய் அண்டாமலும், வந்த நோய் நம் உடம்பிலேயே நிரந்த விருந்தாளியாய் தங்கி விடாமலும் தடுக்க முடியும்.

நமக்கு நாமே மருத்துவராகி கடைகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் நம் உடலின் மொழியான நோய்க்கான அறிகுறிகளை தற்காலிகமாய் மறைத்து உள்ளுக்குள் நோயை வளரச்செய்யும். மேலும் பக்க விளைவுகளின் மூலம் கூடுதல் வியாதிகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.
உடலின் மொழி அறிவோம்.
உணவை முறைபடுத்துவோம்.
ஆரோக்கியத்தை கையகப்படுத்துவோம்.அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக