சனி, 19 அக்டோபர், 2013

முடி உதிர்தல் (Hair loss)

முடி கொட்டுதல் இன்று உலகளாவிய அளவில் அனைவரின் மிகப்பெரிய தலையாய பிரச்சனையாய் கருதப்படுகிறது..... கோபமான வேளைகளில் "போனா என் ம.... போச்சு.. போ" என்று சொல்லிக்கொண்டாலும் கூட முடி உதிர்வதை யாரும் சாதாரணமாய் எடுத்துக்கொள்வது இல்லை..

நமது தோற்றத்தை அழகாக்குவதில் முடிக்கும் பெரும் பங்கு உண்டு. ஒவ்வொருவருக்கும் சாதரணமாக ஒரு நாளைக்கு 50 லிருந்து 100 முடிகள் உதிர்வது இயல்பு. உடலில் ஏற்படும் பாதிப்பு தான் முடி உதிர்தலின் அடிப்படை காரணமாகும். நமக்கு முடி உதிர ஆரம்பிக்கும் போது கூடவே கவலையும், மனதளவில் பெரும் பாதிப்பும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகி அந்த அழுத்ததிலையே இன்னும் முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும்.

முடி உதிர்தல் என்பது வெறும் அழகு பிரச்சனை மட்டுமில்லை. அது உடல் சார்ந்த பிரச்சனையின் வெளிப்பாடே என்பதை உணர்ந்தால் பயமில்லை. உடலில் ஏற்படும் சத்து குறைபாடோ மற்றும் வேறு நோய்களோ கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். முடி உதிர்தலை அலட்சியபடுத்தாமல் காரணத்தை ஆராய்ந்து வியாதியை தொடக்கதிலேயே குணப்படுத்தினால் நீண்ட ஆரோக்கியத்துடனும், முடி இழப்பும் இல்லாமலும் சந்தோஷமாக வாழலாம். இப்போதெல்லாம் சிறு வயதிலேயே முடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருகிறார்கள்..அதை மறைக்க எத்தனை பாடு... இதற்காக எத்தனை செலவுகள்...

நம் உடலில் உண்டாகும் தைராய்டு பிரச்சனை, ஹார்மோன் குறைபாடு, டைபாய்டு, மலேரியா, மன அழுத்தம், நச்சுப் பாதிப்பு, மனக்கவலை, வேலைப்பளு முதலியவையே முடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. வெயிலில் வேலை அதனால் உண்டாகும் வேர்வையுடன் அதிக நேரம் இருத்தல் போன்ற காரணங்களால் கூட முடி உதிரலாம்.

இரசாயனங்கள் அதிகம் கலந்த ஷாம்பு, சோப்புகள், ஹேர் டை உபயோகிப்பது, சுருள் முடியை நேராக்குவது, நீளமாக இருக்கும் முடியை சுருள் சுருளாக மாற்றுவது போன்ற இத்தகைய நம் செயலால் முடியின் தன்மையே பாதிக்கப்பட்டு முடி உடைந்து, சிதைந்து போவதோடு மட்டுமில்லாமல் இன்னும் அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் புரதம், அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரும்பு சத்து உணவுவகைகள் உட்கொள்ளாதபோது முடி உதிரும் அளவும் அதிகரிக்கும். சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகளால் மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனை ஒருபுறம் இருக்க நீர்க்கட்டிகளால் முடியின் தன்மை பலவீனமாகி மெலிந்து முடி உதிர அதுவும் ஒரு காரணமாகும்.

முடிந்த வரை தேங்காய் எண்ணெய் தவிர்ப்பது நல்லது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலை மற்றும் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம், தலையில் அழுக்கு சேர்வது கட்டுப்பட்டு முடி உதிர்வது குறையும்.

முடி உதிரும் பிரச்சனை அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினையே இல்லை. அழகு சாதனப்பொருட்கள் மற்றும் அழகுநிலையங்கள் மூலமாகவோ சரி செய்ய நினைத்தால் பணமும், முடியும் நம்மை விட்டு போவது உறுதி. உடலில் உள்ள குறைகளை கண்டுபிடித்து நல்லெண்ணெய், சிகைக்காய், கடலைமாவு, பச்சைபயறு, வெந்தயம், செம்பருத்தி இலை மற்றும் பூ, நெல்லிக்காய், கருவேப்பிலை இயற்கை முறையில்... நம் உடலுக்கு உள்ளே உண்ணும் பொருட்களை தலைக்கும் உபயோகிப்பது நல்ல பலனைத் தரும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.



தலை முடியை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை தலையை தினமும் கழுவுதல் மிக முக்கியம். தினமும் தலையில் நீர் ஊற்ற முடியாத பட்சத்தில் வாரத்தில் இரண்டு நாள் அவசியம் தலை குளிக்க வேண்டும். இதற்கு தீர்வு உண்டு என்று நம்பி சில பல ஆங்கில மருந்துகளை உட்கொண்டு, மேலுக்கும் பூசி முடியை காப்பாற்ற முடியாமல் மொத்தமும் இழந்தோர் பலருண்டு நம்மிடையே...

முடி உதிர்தலை உடனடியாக கட்டுப்படுத்த எளிய வழி ஒன்று உண்டு...இரவு நேரம் சீக்கிரமாக தூங்க சென்றால் முடி கொட்டும் பிரச்சனைக்கு பாதி தீர்வு கிடைத்து விடும்.இரவு சரியாக தூங்கவில்லையென்றால் மறு நாளே தலை சீவும் போது முடி உதிர்வதை காணலாம்..

வாழ்க்கை முறை, நெருக்கடிகள், அதனால் வரும் மன உளைச்சல் ஆகியவற்றால் நாம் யாருமே இப்போது சரியாக தூங்குவதே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நேரத்தோடு தூங்கி உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து பாருங்கள் முடி கொட்டுவது நிற்பதை கண்கூடாக காணலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக