சனி, 7 ஜூன், 2014

உளுந்து

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்
(அகத்தியர் குணபாடம்)



உடலை வலுவாக்கும் உன்னதமான சிறுதானியம் உளுந்து. இதில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது எனக் கூறுவார்கள்.

உளுந்து உணவை உண்டு வந்தால் உடல் வலுப் பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும், பெண்களுக்கு இடுப்பு எலும்பை வலிமையாக்கும். மாத விலக்கை சீராக்கும். மலச் சிக்கலை நீக்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உண்டான உடல் சூட்டை உளுந்து உணவு தணிய வைத்து நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். உளுந்து வடை பசியைப் போக்கி உடலுக்கு குளுர்ச்சி கொடுக்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும். இடுப்பு வலுவில்லாமல் இருக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருமே உளுந்து களி தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீக்கி எலும்புகள் வலுவாகும்.

குறிப்பாக பெண்கள் பூப்பெய்திய உடன் உளுந்தால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்... பெண்களுக்கு பிரசவ காலத்தில் இடுப்பு எலும்பு வலுவாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும் வழியை தாங்கும் ஆற்றல் கிடைக்கும். இதன் பொருட்டே இடுப்பு எலும்பை வலுவாக்க உளுந்தங்களி, உளுந்து வடை போன்றவற்றை அதிகம் உண்ணக் கொடுப்பார்கள்...

மிக சாதாரணமாக நமது வீடுகளில் காலை மற்றும் இரவு உணவுக்கென இட்லி, தோசை போன்ற உளுந்து கலந்த உணவுகளை கொடுப்பது உடலை வலுவாக்கவும், நிறைய சக்தி கொடுக்கவும் எளிதில் ஜீரண மாகவும் தான்...

அன்றாடம் உண்ணும் உணவை சக்தி கொடுக்கும் விதமாகவும்,, எளிதில் ஜீரணமாகவும் , உடலை பலப்படுத்தும் படியாகவும், அதோடு சுவை நிரம்பியதாகவும் சொல்லித்தந்த நம் முன்னோர்களை மறந்துவிட்டு நவீன யுகத்தில் விளம்பரங்களை கண்டு பீசா - பர்க்கர் கலாச்சாரத்தில் சிக்கி இன்னும் எவ்வளவுகாலம் நோயோடு வாழப்போகிறோம்...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக