வியாழன், 12 பிப்ரவரி, 2015

கோபம்!!!!

கோபம்!!!!
* * * * * * * *
கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
-சுவாமி விவேகானந்தர்
சாந்தம், அன்பு என்பவை மனிதனிடமும் உள்ளவை. அதே போல மனிதனுக்கு கோபமும் இயற்கையானது தான். கோபமே வராது, கோபமே வரக்கூடாது என்று எல்லாம் வரையறுக்க முடியாது. அதிகக் கோபதிலிருந்து வெளி வர, கோபத்தைக் குறைக்க, அறவே அழிக்க அதற்குரிய முயற்சியை மேற்கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள் என்று ஈர்ப்பு விதி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.
கோபதிற்கு மூல காரணம் அறியாமை, இயலாமை, அதிகாரம், தாழ்வு மனப்பான்மை, வறுமை, கண்மூடித்தனம், திறமையின்மை, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற அகங்காரம், ஆணவம், கர்வமும் தான்.
எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்
ஒருவர் நம்மை திட்டினால் அவரை விட மோசமாக திட்டி பழி வாங்கும் வரை நம் மனம் ஓயாது. மோசமான வார்த்தைகளால் திட்டி விட்டோம் என்று சந்தோஷப்படுபவருக்கு ஒரு குட்டித் தகவல் உடலளவில் பாதிப்பு உண்டாவது அதிக கோபப்பட்டவருக்கு மட்டும் தான்.
கோபம் கொள்வதால் உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள், பாதிப்புகள் உண்டாகும் என்பதை இனி பார்க்கலாம்.
கோபத்தால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மூளையில் உள்ள இயக்க கட்டுப்பாட்டு மையங்கள் வேகம் அடைவதால், உடல் உறுப்புகள் வேகமாக இயங்குவதோடு உடலில் உள்ள சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பு நீர்களை சுரக்கும். வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடல் முழுவதும் வியர்க்கிறது. தசைகள் விரைக்கும். முகம் இறுகும். இதயம் வேகமாக துடிக்கும். தசைகளில் எரிதல் நடப்பதால் கல்லீரலிலிருந்து அதிகப்படியான சர்க்கரை செலவாகும். உடலின் சூடு இயல்பு நிலை விட அதிக சூடாகும். உடலில் இரத்த நாளங்கள் சூடாவதால், நரம்பு மண்டலத்தின் வேகம் அதிகமாகிறது. இதனால் மூளையில் உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு கோபம் அதிகமாகும்.
பேச்சு சப்தம் கூடிக்கொண்டே போய் உச்சஸ்தாயில் முடிவடையும். இப்படியே தொடரும் கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். பேச்சு பாதித்து வாய் குளறும். தொண்டை வறட்சி உண்டாகும். அதிகப்பட்ச கோபத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். மனம் செயலாற்றும் தன்மையை இழக்கும். மறதி உண்டாகும். அதிகப்படியான சோர்வு, அசதி, பலவீனம், தூக்கமின்மை, பசியின்மை, அஜீரணம், மலசிக்கல், தலைவலி, மயக்கம் உண்டாகும்.
உடல் அடிக்கடி அதிக சூடானால் இதய நோய், சிறுமூளை, பெருமூளை பாதிப்பு, பித்த தொடர்பான நோய்கள் உண்டாகும். முகத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக இரத்தம் பாய்வதால் கண்களும், முகமும் சிவந்து விடும். தொடர் கோபத்தால் முகம் விகாரமாய் தோன்றுவதோடு, இள வயதிலேயே முதுமை தோற்றமும் உண்டாகும். இதோடு சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு என மிகப் பெரிய பரிசை நமக்கு இலவசமாக வாரி வழங்கும் வள்ளல் தான் இந்த கோபம்.
கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள். அமைதியாக இருந்தால் கோபம் நம்மை அசைக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட. அமைதி உள்ளுணர்வுக்கு வலிமை அளிக்கிறது. வலிமை பெற்ற உள்ளுணர்வால் கோபத்திலிருந்து விலக, விலக்க முடியும். வெறுப்பை கைவிட்டு, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை ஆராய்ந்தால் போதுமானதே!
உடல் நலத்தை மனதில் கொண்டு நோயின்றி வாழ விருப்பமா? இனி கோபம் வரும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள். கோபமூட்டும் சூழலை விட்டு அகலுங்கள். குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். திறந்த வெளிக்கு சிறிது நேரம் செல்லுங்கள். மனதிற்கு பிடித்த பாடல்களை கேளுங்கள். மனம் அமைதியாகும் வரை 1லிருந்து 100 வரை எண்ணுங்கள். இதுவே கோபம் போக்க மிகச் சிறந்த எளிய வழிகள்.
எல்லாம் இழந்து விட்டு காலம் கடந்து யோசிப்பதை விட, கோபம் எனும் அரக்கனை வேரோடு வீசி எறியுங்கள்.
கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான பலசாலி. இனி நாம் யாவரும் பலசாலிகள் தானே!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக