செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஹைபோதாலமஸ் (Hypothalamus)

ஹைபோதாலமஸ் மூளையில் பாதாம் கொட்டையின் அளவில் உள்ள உடலை இயக்கக் கூடிய மைய இயக்கு விசையாக செயல்படும் முக்கிய உறுப்பு. நமது செயல் பாடுகளை இயக்க கூடிய இயக்க சக்தியாக இது கருதப்படுகிறது.
ஹைபோதாலமஸில் உள்ள தனித்தனி செல் தொகுப்புகளில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், ஹார்மோன் கட்டுப்பாடு, பசி,தாகம், தூக்கம், விழிப்பு, உடலின் எதிர்ப்பு சக்தி, மறு உருவாக்கம் என பல முக்கிய வேலைகள் முறைப்படுத்தப்படுகிறது. வயதை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக செயல்படுகிறது. மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ். ஹைபோதாலமஸ் பகுதிக்குள் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் வெப்பநிலையை வைத்தும், வெப்பத்தை நன்கு உணர்ந்துகொள்ளும் தன்மை கொண்ட, தோலின் கீழே முடிவடையும் நரம்புகள் அனுப்பும் தகவல்களின் அடிப்படையிலும்தான் செயல்படுகிறது.



நரம்பு மண்டலம், பிட்யூட்டரி சுரப்பியின் செயல்கள் வளர்சிதை மாற்ற விளைவுகள் வளர்ச்சி, இரண்டாம் நிலை பாலின உறுப்புகள் பெருக்கம் இவைகளை சீரிய முறையில் ஒருங்கிணைக்கும் முக்கிய உறுப்பு. பிட்யூட்டரி சுரப்பியின் மூலமாக ஹைபோதாலமஸ் பல ஹார்மோன்களை தூண்டி செயல்படுவதால் இந்த அமைப்பு ஒரு நரம்பு மண்டல நாளமில்லா சுரப்பி மண்டலமாக செயல்படுகிறது எனலாம்.

மேலும் பாம்பு, தவளை உடல் மிகவும் குளிர்ந்து விட்டால் ஒரு நிலைக்குமேல் அவற்றால் உயிர்வாழ முடியாது அதனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்க வெயிலில் காய்ந்து உயிரை தக்க வைத்துக்கொள்ளும். மனிதர்களுக்கு வெப்பச் சமநிலையை மூளையே பராமரிக்கும். வழக்கமான வெப்பநிலையை விட உடல் வெப்பநிலை அதிகரித்தால்,வெப்பநிலை குறைந்தால் அவற்றைச் சரியாக உணர்ந்துகொண்டு நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் செயல்படும் வகையில் அமைந்துள்ளது.

உடலின் வெப்பநிலை அதிகரித்தால், வியர்வை மூலம் வெப்பத்தையும், குளிர் அதிகரித்தால் தசைகளுக்கு நடுக்கம் கொடுத்து கூடுதல் வெப்பநிலை உருவாக்கும். உடல் செயல்பாடுகளின் ஒரு பகுதியான அனிச்சைச் செயல்பாடுகள், நரம்புப் பாதைகளில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. கடுமையான வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், உடலில் உள்ள நீர் பெருமளவு வெளியேறி சன் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழக்கும் ஆபத்துக்களை ஹைபோதாலமஸ் தான் தடுக்கிறது.

ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் தான் உள்ளது.
நம் உடலில் ஹைபோதாலமஸ் ஆற்றும் பங்கை வரையறுத்து கூறிவிட முடியாத அதிசயம் எனவே கூறலாம். இன்னும் ஆரய்ச்சியில் முடிவேகாணப்படாத நிலையில் உள்ள மிக மகத்தான உறுப்பு. ஹைபோதாலமஸ் இயற்கை நமக்கு கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக