வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிரிப்பின் இரகசியம்

மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு என இரண்டு வகை சிரிப்பு இருந்தாலும் வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

பயம், கோபம் போன்ற எதிரிமறை எண்ணங்களை மாற்றுகிறது. சிரித்து மகிழ்வதால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைப்பதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அவசரமான வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. ஒரு நாளில் குழந்தைகள் மட்டுமே சராசரியாக 400 தடவைகள் சிரிக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்களாம். சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கவும், கோபம் நமது ஆயுளை வீழ்த்தவும் செய்யும். பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சிரிப்பவர்களுக்கு பாஸிடிவ் எனர்ஜி அதிகமாவதால், சிரிப்பவர்கள் மட்டுமே எங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பை ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வில் உறுதி செய்துள்ளார். சிரிக்கும் போது உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் (Healthy Enzymes) உற்பத்தியாவதால் மனம், உடல் நலனை மேன்மையுறச் செய்து, சிரிப்பே நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது.




சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். மன இறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து தசைகளும் இயக்கப்படுகிறது. சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று நோய்களினின்றும் தன்னைக் காத்து முக வசீகரம் மற்றும் அழகைக் கூட்டும். சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது.

சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நரம்புகள் வேகம் கொண்டு முறுக்கேறி இரத்தத்தில் அமிலத்தை தேவையில்லாமல் அதிகமாக சுரக்கும். கோபம் முகத்தை விகாரமாக்கும். சிரிப்பு மன அழுத்தத்தை குறைத்து, உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.

உயிர் எழுத்துக்களல் ‘அ’ முதல் ‘ஓ’ வரை வரிசையாகத் தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகுமாம். சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக