வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நோய்களும், காரணங்களும் - கருடபுராணக் குறிப்புகள்



"என்ன பாவம் பண்ணேன்னு தெரியல..இப்படி ஒரு கஷ்டம் படறேன்"னு பொதுவாக அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறாமல் இருக்க மாட்டோம்.

போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் எதையாவது செய்தால் தான் வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் பலரும், அந்த தவறுகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரியாமலேயே பொழுதுபோக்காக சிலரும் தவறுகளை செய்து வருகின்றனர். செய்யும் பாவங்களுக்கு தகுந்தாற் போல மோசமான விளைவுகளை கண்டிப்பாக நாம் திரும்ப அனுபவிக்க வேண்டும் என்ற பய உணர்வை உணர்த்தவே கருடபுராணத்தில் பல குறிப்புகள் கூறப்பட்டு இருக்கின்றன.

நீதி நெறிகளை கடைபிடித்து மக்கள் வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கருடபுராணத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் இவை.

ஒரு பிறவியில் குற்றமும், பாவமும் புரிந்தால், அடுத்த பிறவியில் அவர்கள் வாழ்க்கையும், உடல் நலமும் எப்படிப் பட்ட வேதனைகளை படும் என சுட்டிக்காட்டவே இக்குறிப்புகள் கூறப்பட்டிருக்கலாம்.

ஒருவருக்கு வரும் நோயின் தன்மை, அதற்கு முன்னதாக அமைந்த காரணங்கள் பற்றிய விளக்கம். ஒரு சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு.

பசுவை கொன்றால் கூனராகவும், சபல புத்தியுள்ளவராகவும்(இப்போது பசுவை கொல்வோர் அனேகம் பேர்),கன்னிப்பெண்ணை கொல்பவர் தொழுநோயாளியாகவும், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளிடம் சேர்பவன் அலியாகவும், குருவின் பள்ளியறையை களங்கப் படுத்தியவர் தோல்வியாதியாலும், கருவுற்ற பெண்ணை கொல்பவர் நோய் முற்றிய காட்டுமிரண்டியாகவும், பிராமணனை கொல்பவர் காச நோயால் அவதிப்பட்டும் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிப்பர்.

அகந்தையால் குருவை நிந்திப்பவர் காக்காய் வலிப்பு நோயாலும், வேதங்களையும், சமய நூல்களையும் இகழ்பவர் மஞ்சட்காமாலை நோய்க்கும், புனிதம் மிகுந்த சமய நூல்களை திருடுபவர் குருடனாகவும்,பொய் சாட்சி கேட்பவர் செவிடனாகவும் பிறப்பது நிச்சயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் , நஞ்சு கலப்பவன் பைத்தியமாகவும், திருமணங்களை நிறுத்துவோர் பிளந்த உதட்டோடும் பொய் பேசுபவன் திக்கு வாயாகவும், தீ வைத்து கொளுத்துபவர் வழுக்கைத் தலையனாகவும் பிறப்பர்.

மனித வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த , ஒழுக்கமாய் வாழ வைக்க , வாழும்வரை மற்றவர்களுக்கு துன்பம் தராமலும் கூடுமானவரை மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழவைக்க நம் முன்னோர்கள் பற்பல ஒழுக்க நெறிகளை போதித்து சென்றிருக்கிறார்கள்...
கருட புராணம் உண்மையா, அங்கே யார் போய் பார்த்துவிட்டு வந்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்பதன் மூலம் வழக்கம் போல நம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்வதை விடுத்து கருடபுராணம் குறிப்பிட்டிருக்கும் தண்டனைகளை தான் இப்போது நம்மில் எல்லோருமே அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளலாம்..

ஆனால், இதே தண்டனைகள் அடுத்த பிறவியிலும் தொடர வேண்டுமா?? வாழும்வரை பாபகாரியங்கள் செய்யாமலும், முறையான உணவுப்பழக்கங்களை கையாண்டும், தீய பழக்கங்களை தவிர்த்தும் நம் முன்னோர்கள் ஆலோசனைப்படியே வாழ்ந்தோமானால் எவ்வித பயமும் இன்று இந்த பிறவியிலும் அடுத்த பிறவியிலும் கூட நோயின்றி வாழலாம்..

ஏனென்றால் எதையாவது செய்துவிட்டு,.. அய்யோ...இது நம்மை பாதிக்குமோ என்று பயந்து பயந்து வாழ்ந்தால் அந்த பயமே மேலும் மேலும் வியாதிகளை கொண்டுவந்து சேர்க்கும்..

உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு நோய் (அ) துன்பம் இல்லாமல் வாழ முடியாது. எப்போதுமே மனதை தாக்கும் முதல் வியாதி பயம் மட்டுமே..அந்த பயமே வியாதியாக உடலுக்கு மாற்றம் செய்யப் படுகிறது. அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும், முடிந்த வரை தீமை செய்யாமல் வாழ பழகலாம். இது வரை தெரிந்தோ, தெரியாமலோ சில, பல தவறுகளை செய்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் முற்றிலும் தவிர்த்து, மறப்பதும், மன்னிப்பதுமாக வாழ முயற்சிக்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக