புதன், 14 ஜனவரி, 2015

சளி, அடுக்கு தும்மல், தலைபாரம் குணமாக - உணவே மருந்து

சளி, அடுக்கு தும்மல், தலைபாரம் குணமாக - உணவே மருந்து
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்றைய சூழலில் காற்று மாசுபட்டு தூசுக்களும், வாகன புகைகளில் வெளிவரும் கரித் துகள்களும் காற்றோடு கலந்து நுரையீரலுக்குள் புகுந்துவிடுவதாலும், புகை பிடிப்போரே நேரடியாக தார்- கார்பன் மோனாக்சைடு போன்றவற்றை நுரையீரலுக்கு அனுப்புவதாலும் நுரையீரல்தேவைக்கதிகமாகவே சளியை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சளி நமக்கு நஞ்சாகி விடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது சளி மட்டும் என்ன செய்யும்?

சிலர் தூங்கி எழுந்த உடன் அடுக்கடுக்காய் தும்முவார்கள். கண்களில் நீர் வழிய வழிய தொடர்ந்து தும்முவார்கள். இதை தொடர்ந்து தலைவலி, தலை கனம்(இது அந்த தலைக்கனம் அல்ல) எல்லாம் வரும்!
இப்படியாக மனம்- மற்றும் உடல் நலத்தை கெடுக்கும் தும்மல், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சினைகள் வந்த உடன் வழக்கம் போல நம்மூர் தொலைகாட்சி விளம்பரங்களில் நான் கற்று வளர்த்துக்கொண்ட அறிவை பயன் படுத்தி அருகில் உள்ள மெடிக்கல் போன்றவற்றிற்கு சென்று கோல்ட் ஆக்ட், கோல்ட்டாரின், டொலப்பர், சிட்ரசின் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அந்த பிரச்சினையை தற்காலிகமாக பூசி மறைத்துக்கொள்வோம். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் நாம் அதை தற்காலிகமாக மூடி, மறைத்து நமக்குள்ளே வைத்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது தான். மூடி வைக்கப்பட்ட அந்த பிரச்சினை உள்ளுக்குள்ளேயே வளர்ந்து ஒருநாள் நாம் சாப்பிட்ட இரசாயன மருந்துகளின் பக்கவிளைவுகளுடன் வெடித்துக் கிளம்பும்.

பக்க விளைவுகள் நிறைந்த இந்த மருந்துகளினால் நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் பாழாகிக் கொண்டே போகும். எதனால் நம் உறுப்புகள் பாதிப்புகுள்ளாகிறது என்று நாம் உணரும் போது நாம் இழந்தது பணம் மட்டுமில்லாமல் நம்முடைய உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டையும் தான்.

நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர். ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிற்கு மருத்துவ குணம் உண்டு. அவற்றை முறையாக நாம் எடுத்துக்கொள்ளும் போது நம் உடலை பேணி காத்திட முடியும்.

சளி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண நம் வீட்டில் இருக்கும் மஞ்சள்பொடி, மிளகு, சீரகம், நெல்லிக்காய், எலுமிச்சை, வெங்காயம், தேன் இவையே போதுமானது. தொற்றுகள், அலர்ஜி மற்றும் புகைப்பதால் நம்முடைய நுரையீரல் பலவிதமான நோய்களை எதிர்கொள்ளும். நுரையீரலை ஆஸ்துமா, பிராங்கடிஸ் போன்ற வியாதிகளில் இருந்து நம்முடைய பழமையான, பெருமை மிக்க, சக்தி வாய்ந்த நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து சென்ற அரிய வகை வைத்திய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

இந்த எளிய உணவு வகையால் நம்முடைய நுரையீரல் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று முழுவேகத்துடன் செயல்படும் என்பது உறுதி.

தேவையான பொருட்கள்:
--------------------------------------
1.சிவப்பு நிற வெங்காயம் - அரை கிலோ
2.நாட்டு சர்க்கரை (பிரவுன் சுகர்) – அரை கிலோ
3.எலுமிச்சை – 2
4.தேன் – ஏழு டீஸ்பூன்
5.ஒண்ணரை லிட்டர் தண்ணீர்

அடி கனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமாக சூடேறியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் நாட்டுச் சர்க்கரை பிரவுன் கலர் மாறும் வரை கிளறி, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டிலேயே மூன்றில் ஒரு பாகம் வரும் வரை கலவையை சூடாக்க வேண்டும்.

பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து அதில் எலுமிச்சை சாறையும், தேனையும் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

இந்த ஜூஸை தினமும் சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். சளியின் தாக்கம் உடலில் குறைவதை ஒரே வாரத்தில் நாம் உணரலாம்.
நமது நுரையீரலில் சளியின் தாக்கம் குறைந்து மூச்சு சீராகும் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்.

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் உணவே மருந்தாக நம் உடலில் செயல்படுவதால் நவீன மருத்துவரோ- மருந்தோ இன்றி, பக்க விளைவுகள் இன்றி நம்மை முழுவதும் சளியின் பிடியில் இருந்து மீட்கும். இந்த எளிய முறையை அனைவரும் வீட்டில் செய்து பயன் பெறுவோம்...!!!!அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக