ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வலிப்பு நோய் (Fits )



இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை வயது வரம்பின்றி எந்த வயதினரையும் தாக்கும். பொதுவாக நோய்கள் குறித்த போதிய தெளிவின்றி நாமே எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், சிகிச்சைகளும், அறிவுரைகளும் நோயின் தன்மை அதிகமாகவதற்கு காரணமாக அமைகிறது. வலிப்பு நோயும் இதற்கு விதி விலக்கு அல்ல. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாத காரணத்தினால் இந்த நோயின் தாக்குதலும் தீவிரமாகவே இருக்கிறது.

வலிப்பு எனப்படுவது மூளைப்பகுதியில் ஏற்படும் இழுப்பு நோயின் தாக்குதல். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் இயக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்கள், சிறிது நேரம் தடங்கல்கள் ஏற்பட்டு உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் வெட்டி வெட்டி இயங்குவதே வலிப்பு எனப்படுகிறது.. இது காக்கா வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் மற்றும் எபிலெப்ஸி என்றும் வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள் , மூளையில் ஏற்படும் கட்டிகள், மூளைக் காய்ச்சல், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகள், மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் , நரம்புமண்டலக் குறைபாடு , போதை பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் மனம் மற்றும் நரம்பு மண்டல சிதைவு, உடலில் சர்க்கரை அளவு (அ) சோடியத்தின் அளவு குறைதல் , உறக்கமின்மை, காச நோய், அஜீரணம், குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாதல் போன்ற காரணங்களினால் வலிப்பு நோய் உண்டாகிறது. வேறு சிலருக்கு எந்த விதமான காரணமும் இல்லாமலும் வரலாம்.

கண் மேலே சொருகிக்கொண்டு மயக்கமடைதல், கை, கால் மற்றும் உடலில் உள்ள பாகங்கள் வெட்டிகொள்வதோடு வாயிலும் நுரை தள்ளுதல், தன்னிலை மறந்து பேசுதல், ஒரே இடத்தை கண்சிமிட்டாமல் பார்த்தல், அதிகபட்சமாக சிறுநீர் கழித்தல் ஆகியவை வலிப்பு நோயின் அறிகுறிகள் ஆகும்.

அதிக அளவு உணவு உட்கொள்வது, வெகுநேரம் தூங்காமல் விழித்திருப்பது, போதை பொருட்கள் மற்றும் மது அருந்துவது போன்றவற்றை வலிப்பு நோயாளிகள் தவிர்ப்பது அவசியம்.இந்நோய் உள்ளவர்களுக்கு கால்சியம், க்ளுக்கோஸ், சோடியம், அமிலம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவை சமனின்றி இருக்கும். எனவே அவர்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் தவிர்த்து விட வேண்டும்.

வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பு அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது மூட நம்பிக்கையே தவிர குணமாக்கும் முறையும் இல்லை.முதலுதவியும் இல்லை. ஒரு தேக்கரண்டி (அ) கடினமான பொருளில் துணியை நன்றாக சுற்றி நோயாளியின் பற்கள் இடையில் வைத்தால் அவர்கள் தன நாக்கை கடித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வலிப்பும் ஒரு நோய் தான் அதனால் இந்த நோய் உள்ளவர்களைக் கண்டு நாம் பயப்படாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே போதுமானது. சரியான சிகிச்சையால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக