செவ்வாய், 14 அக்டோபர், 2014

அனைவருமே மருத்துவரானால்!!!


ஒருமுறை அக்பரும் பீர்பாலும் உலாவ சென்ற பொழுது ஒரு பேச்சு எழுந்தது.... அக்பர் கேட்டார்... "நமது நாட்டில் எந்த தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள்? விவசாயமா.. வியாபாரமா.. படைத் தொழிலா?( படை வீரர்கள்)..

பீர்பால் சொன்னார்... "நீங்கள் சொல்லும் எந்த தொழிலும் இல்லை மன்னா.. நம் மக்களில் அதிகப்படியானோர் மருத்துவர் வேலை செய்கிறார்கள்.
அக்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை... "நம் நாட்டில் அவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்களா... பீர்பால்.. உனக்கு சித்தம் எதுவும் கலங்கி விட வில்லையே...?"
"இல்லை மன்னா... நீங்கள் கேட்டீர்கள் .. நான் பதில் சொன்னேன்.. அவ்வளவுதான்..."
"வர வர உனக்கு மூளை மழுங்கிக்கொண்டே போகிறது.." என்று சொல்லிவிட்டு அக்பர் போய் விட்டார்...



மறுநாள் அரசவை கூடிய பொழுது.. மந்திரி பிரதானிகள் எல்லோரும் அங்கே வந்து விட்டார்கள்.. ஆனால் பீர்பால் மட்டும் வரவில்லை... அக்பர் "பீர்பால் எங்கே..?" என கேட்டார்...
"அவருக்கு கடுமையான காய்ச்சல்.. அதனால் வரவில்லை.. என தகவல் வந்தது மன்னா.." என்று சேவகன் சொன்னான்..
"இதற்காகவா பீர்பால் அரசவை கூட்டத்தை புறக்கணிக்கிறார்... ஒரு சுக்கு கஷாயம் போட்டு குடித்துவிட்டால் காய்ச்சல் போய்விட போகிறது.. நீ உடனே சென்று பீர்பாலை அழைத்து வா..."
சிறிது நேரத்தில் கம்பளிகளை அள்ளி போர்த்தியபடி , நடுங்கிக்கொண்டே பீர்பால் அரண்மனைக்குள் வந்தார்...

அவரை கண்ட அக்பர்... அடடா... உனக்கு நடுங்குகிறதே... குளிர் காய்ச்சல் போல.. இதற்கு நீ சுக்குவுடன் கொஞ்சம் கொத்துமல்லியையும் சேர்த்து...." என்று சொல்ல ஆரம்பித்த உடன்... பீர்பால்.."நூற்று நாற்பத்தேழு...." என்றார்...
அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை... "என்னது நூற்று நாற்பத்தேழு?" என்று வினவினார்...

"ஆம் மன்னா...நான் காய்ச்சல் என்று சொன்னதில் இருந்து.. என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், தெருவில் பார்த்தவர்கள், வாயில் காப்போன், அரண்மனை சேவகன் என இதுவரை நூற்று நாற்பத்தாறு பேர் வைத்தியம் சொல்லி இருக்கிறார்கள்... இப்போது அரசர் வேலையை விட்டுவிட்டு நீங்களும் வைத்தியர் வேலை செய்ய வந்துவிட்டீர்கள்... இப்போது புரிகிறதா.. நம் நாட்டில் எந்த தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள் என்பது..." என கேட்டார். அப்போதுதான் அக்பருக்கும் புரிந்தது...

மேற்கண்ட கதை வெறும் நகைச்சுவைக்காக அல்ல... முழுக்க முழுக்க உண்மை.
இக்காலத்தில் காய்ச்சல், தலைவலி முதல் கேன்சர், கிட்னி ஃபெய்லியர் வரை எந்த நோய் வந்தாலும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் செய்துகொள்கிறார்கள்.. அனாசின், நோவால்ஜின் ஆக்ஷன் 500 முதல்... கூகுளில் தேடி ஆஸ்ப்ரின், பெண்டாமஸ்டின் (Bendamustine is used to treat chronic lymphocytic leukemia (CLL) and non-Hodgkin lymphoma, and may be used for other types of cancer.) வரை மக்களே மருந்துகளை உட்கொள்கிறார்கள்.. அல்லது மற்றவருக்கு பரிந்துரைக்கிறார்கள்...
முறையாக படித்து, அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளிலேயே பக்க விளைவுகள் என்ற பெயரில் உறுப்புகள் பாழாகும் போது, இப்படியான இன்ஸ்டன்ட் மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துகளை உட்கொண்டால், உட்"கொல்லும்" என்பது தெரிந்த விஷயம் தானே....

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியான உடல் வாகு உண்டு... இரண்டு பேருக்கு ஒரே வியாதி இருந்தாலும் அதன் மூலக்காரணம் வேறாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது பக்க விளைவுகள் நிரம்பிய பெட்டிக்கடை மாத்திரைகளையும், கூகுளில் யாரோ பதிவிட்ட தகவல்களின் அடிப்படையிலான மாத்திரைகளையும் அது நமக்கு ஒத்து வருமா என்பதை அறியாமலேயே உட்கொண்டு பக்க விளைவுகளை வாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?

ஆனால் நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள் சொல்லிச்சென்ற உணவு மருத்துவம், பாரம்பரிய வைத்தியங்கள், மூலிகை மருந்துகள் அப்படி அல்ல... எந்த உடலுக்கும் எந்த சீதோஷ்ண நிலைக்கும் ஏற்புடையது... பக்க விளைவுகள் இல்லாதது...

சித்தர்களா? நவீன மருத்துவரா?
மருந்துகளே இல்லாத உணவு முறைகளுடன் கூடிய அக்குபஞ்சர் மருத்துவமா?
அல்லது
வாழும் வரை மாத்திரைகளோடு வாழ வைக்கும், பக்க விளைவுகளை கொட்டித்தரும் மருந்துகளோடு கூடிய மருத்துவமா?
இப்போது நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக